மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 5) மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, இதனை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டிருந்தனர். இந்தநிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக நினைவிடத்திற்கு 50 பேர் மட்டுமே சென்று அஞ்சலி செலுத்த காவல்துறை அறிவுறுத்தியிருந்தது.
இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எல்லோரும் எல்லாமும் பெற எந்நாளும் உழைத்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத, என்றென்றைக்கும் வழிகாட்டியாய்த் திகழும் அம்மா நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
அம்மாவின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவ படத்துக்கு, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அம்மாவின் வழியில் மக்களால், மக்களுக்காக என்றென்றும் பயணிப்போம். அவரின் நூற்றாண்டு கனவை நெஞ்சில் நிலைநிறுத்தி, மக்களுக்கான ஒரே இயக்கம் அதிமுக என்பதை நம் செயலில் உறுதிப்படுத்தி , மக்கள் பணியே மகேசன் பணியாய்க் கொண்டு அயராது உழைப்போம்”என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மிக்ஜாம் புயல்: முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தொடங்கியது!