அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 21) மாலை நடைபெற்றது.
அதில் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் வரும் 3 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி வேலைகளை முடிக்க வேண்டும் என்றும் அதற்கான பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
மேலும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா மீது ஊழல் வழக்கில் சிபிஐ விசாரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விவாகரம் குறித்து தலைமை கழக நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது, ”ஆளுநர் செய்தது ஒரு வகையில் நமக்கு நல்லது தான். பாஜக உறவை முறித்து கூட்டணியில் இருந்து பிரிந்து வந்தாலும், அதிமுக பாஜகவுடன் கள்ள உறவு வைத்துள்ளது என்று திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இல்லை என்று நாம் எவ்வளவு முறை கூறியும், அதையே அவர்கள் திரும்ப திரும்ப பேசி வருகிறார்கள். தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனையின் பேரில் தான் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் பாஜக அதிமுகவிற்கு எதிராக உள்ளது என்பது மக்களுக்கு புரிந்திருக்கும். அதனால் ஒருவகையில் ஆளுநரின் இந்த முடிவு நமக்கு நல்லது தான். விசாரணை குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். நாம் இதனை சட்டபடி எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோயிலில் யாகம் செய்ய கோடிக்கணக்கில் பட்ஜெட்… சர்ச்சையில் என்எல்சி சேர்மன்!
இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அடுத்த அதிர்ச்சி!