ஜூலை 11ஆம் தேதி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 17) தீர்ப்பு வழங்கியது.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 18) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அதிமுகவை சில பேர் தன்வசப்படுத்த நினைக்கிறார்கள்.
அதனைத் தடுக்க முயற்சிக்கின்ற போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களால் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது. ஓ.பி.எஸ் அடிக்கடி அழைப்பு விடுப்பவர். அவருக்குப் பதவி வேண்டும்.
பதவி இல்லாமல் அவரால் இருக்க முடியாது. உழைப்பு கிடையாது, ஆனால் பதவி மட்டும் வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வேண்டும். அவருடைய மகன் எம்.பி-யாக வேண்டும். மத்திய அமைச்சராக வேண்டும். மற்றவர்கள் யார் எப்படி போனாலும் அவருக்குக் கவலையில்லை.
ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஏன் ஓ.பி.எஸ் கலந்துகொள்ளாமல் நீதிமன்றம் சென்றார். அதிமுக அலுவலகத்தை குண்டர்களோடு சென்று சூறையாடியிருக்கிறார். அவரோடு என்னால் எப்படி ஒத்துப்போக முடியும்? எப்படி இணைந்து செயல்பட முடியும்?.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கட்சி நிர்வாகிகள் என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறார்கள். ஓபிஎஸ் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பில் இருந்து கொண்டு, ஒவ்வொரு முறையும் அநாகரிகமாகவும், தாழ்வாகவும் ஓபிஎஸ் செயல்படுகிறார்.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் ஓ.பி.எஸ் தான். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் என்னை எதிர்க்கட்சி தலைவராக, ஆதரிக்கும் போது, ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
ஓ.பி.எஸ் மகன் ரவிந்திரநாத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்கிறார். இது கட்சியினரிடையே மனச்சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒட்டுமொத்தக் கட்சித் தொண்டர்களின் விருப்பப்படி தான் ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட்டது. நான் எப்பொழுதும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது கிடையாது 1989-ம் ஆண்டு ஜெயலலிதா போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் போது அவரை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்பட்டார்.
அவர் எப்படி அம்மாவின் உண்மையான விசுவாசியாக இருக்க முடியும்? ஒற்றைத் தலைமை விவகாரத்தில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் 15 நாட்கள் ஓபிஎஸ் உடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அவர் எதற்கும் ஒத்துவரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன். இது தான் திமுக-வின் தாரக மந்திரம்.
மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இளைஞர்கள், மாணவர்கள் போதைபொருளுக்கு சீரழிந்துவிட்டார்கள்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செல்வம்