தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் நேற்று (பிப்ரவரி 26) தேசிய ஜனநாயக கூட்டணியில் தாங்கள் அங்கம் வகிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். அவரை அண்ணாமலையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதேநேரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி செயலாளரான யுவராஜா அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், யாரோடு கூட்டணி வைப்பது என்று செயற்குழு உறுப்பினர்களிடம் சீட்டு மூலம் எழுதி கருத்துக்களை கேட்டறிந்தார் ஜி.கே.வாசன். அதில் பெரும்பாலானோர் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தினார்கள்.
ஏனென்றால் இப்போதைய மக்களவைத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்தால் குறைந்தது இரண்டு எம்.பி. சீட்டுகள் வாங்கலாம், அடுத்தது சட்டமன்றத் தேர்தலில் அதே கூட்டணியில் கணிசமான இடங்களை பெற்று சட்டமன்றத்தில் நம் குரல் ஒலிக்கலாம் என்பதுதான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின் கருத்து.
அதேநேரம் மீண்டும் மோடி ஆட்சி அமையும் பட்சத்தில் ஜி.கே வாசன் மத்திய அமைச்சராவார் என்று பாஜக உறுதியளித்திருந்தனர். இதை வாசன் மூலமாகவே அவருக்கு தனிப்பட்ட முறையில் நெருக்கமான சில நிர்வாகிகள், ’வாசனின் முடிவே இறுதியானது’ என பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தனர்.
இந்த சூழலை எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியப்படுத்திவிட்ட ஜி.கே. வாசன், நேற்று அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். அதேநேரம் ஈரோடு பகுதியை சேர்ந்தவரும் எடப்பாடிக்கு நெருக்கமானவருமான தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞரணி செயலாளர் யுவராஜா எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
இதுகுறித்து யுவராஜாவிடம் மின்னம்பலம் சார்பில் பேசினோம். ”ஐயாவோடு மோடி பொதுக்கூட்டத்துக்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம்” என்று சொன்னார்.
’என்ன சார்… நேற்று எடப்பாடியை சந்தித்தீர்கள்? இன்று மோடியை சந்திக்கப் போகிறேன் என்கிறீர்களே?” என்று கேட்டோம்.
“இத்தனை வருடங்களாக கூட்டணியில் இருந்தமைக்காக எடப்பாடி அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்து வந்தேன். மற்றபடி ஐயாவோடுதான் பயணிக்கிறேன்” என்றார்.
“வாசனின் மெசேஜ் எதையாவது எடப்பாடியிடம் கொண்டு சேர்த்தீர்களா?” என்று கேட்டோம். “இல்லை இல்லை… நான் தனிப்பட்ட முறையில்தான் சந்தித்தேன்” என்றார் யுவராஜா.
அதிமுக வட்டாரங்களில் இது குறித்து விசாரித்த போது, “எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னாலும் கேட்பார் யுவராஜா. நேற்று எடப்பாடியை சந்தித்த யுவராஜா, ‘நிர்வாகிகள் எல்லாம் அதிமுகவோடு தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சொல்லியும் ஐயா பாஜகவோடு கூட்டணி அமைக்கிறார்’ என்று சொல்லியுள்ளார்.
அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‘வாசன் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். உங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும். இந்த ஒரு தேர்தலுக்காக அவரை விட்டுவிட்டு நீங்கள் வர வேண்டாம். நீங்கள் அங்கேயே இருங்கள்’ என்று சொல்லி யுவராஜாவை அனுப்பி வைத்திருக்கிறார்.
மேலும், அதிமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுப்பவர்களுக்கும் அதிமுக பேச்சாளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் கூட்டணியை விட்டுச் சென்றதற்காக வாசனை தாக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி” என்கிறார்கள்.
அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அமைய வேண்டும் என்று கடைசி வரைக்கும் முயற்சி செய்தவர் வாசன். இதற்காக டெல்லி பாஜக தலைமைக்கும் எடப்பாடிக்கும் இடையே பாலமாக கூட செயல்பட்டார்.
இந்தநிலையில், வாசன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய, அவரை தாக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தனது கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
“பாஜக தலைமைக்கு நெருக்கமான வாசனோடு நல்லுறவு எப்போதும் தனக்கு அவசியமானது என்று கருதுகிறார் எடப்பாடி” என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களிலேயே.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நாடாளுமன்ற தேர்தலில் தவாக தனித்துப் போட்டியா?
அஜித் – விஜய் படங்களில் நடிக்க மறுத்த சாய் பல்லவி?