விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என்பது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து இன்று (ஜூன் 16) விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனையடுத்து கடந்த 14ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணி சார்பில் பாமக மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதே சமயம் எதிர்க்கட்சியான அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில் அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பங்கேற்றார். அப்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என விளக்கம் அளித்தார்.
அவர் பேசுகையில், “திமுக ஆட்சியில் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்தது. இடைத்தேர்தலில் வாக்காளர்களை பட்டியில் அடைப்பதுபோல் தினந்தோறும் திமுகவினர் கொடுமைப்படுத்தினர். தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளவில்லை.
ஆளும் திமுகவுக்கு ஆதரவாக காவல்துறை, அரசு அதிகாரிகள் உள்ளனர். அமைச்சர் பெருமக்கள் எல்லாம் அங்கு சென்று, தங்களது பண பலம், படைபலம் எல்லாம் பயன்படுத்துகின்றனர். பரிசு பொருட்கள் எல்லாம் வழங்கி பல்வேறு தில்லுமுல்லு செய்தனர்.
திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. சுதந்திரமாக தேர்தல் நடக்காது என்பதால்தான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்றம் தொகுதியில் உள்ள விக்கிரவாண்டியில் 6,000 ஓட்டு வாக்கு வித்தியாசத்தில் தான் தோற்றோம். உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளோம்.
2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் கனவு பலிக்காது. தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அதிக இடங்களில் வென்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு” : ப.சிதம்பரம் விமர்சனம்!
AUSvsSCO : போராடி தோற்ற ஸ்காட்லாந்து… தலை தப்பிய இங்கிலாந்து!