”கொடநாடு வழக்கில் உங்களுக்கு சந்தேகம் என்றால் சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டியது தானே?” என்று எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (ஆகஸ்ட் 30) சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மதுரையிலிருந்து சென்னை செல்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக மாநாட்டில் மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்த ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
நானும் டெல்டாகாரன் என்ற வீர வசனம்!
50 ஆண்டுக்கால காவிரி நீர் பிரச்சனைக்கு உச்சநீதிமன்றத்தில் முழுமையான தீர்ப்பை நாங்கள் பெற்றோம். மாதம் குறிப்பிட்ட டி.எம்.சி., திறக்க வேண்டும் என்ற உத்தரவைப் பெற்றுத் தந்தது அதிமுக அரசு.
அதுமட்டுமின்றி காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு கால தாமதம் செய்ததால் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.
பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட போது கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்கிறார். அப்போது தமிழ்நாட்டு பிரச்சனையை பேசினா தப்பா?
இந்தியா என்கிற கூட்டணியின் நோக்கம் என்ன? நாட்டு மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு தானே காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தீர்கள்? உங்களால் தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை. நீங்கள் இந்தியாவை காப்பாற்ற போகிறீர்களா? இது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனான் எனும் பழமொழியை போல் உள்ளது.
முதலமைச்சர் பெங்களூரு சென்ற போது கர்நாடக அமைச்சரிடம் பேசி விவசாயிகளுக்காக நீரை பெற்றுக் தந்திருந்தால் மக்கள் பாராட்டி இருப்பார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று சொல்வதற்கு முதல்வர் தயங்குகிறார். அவர் அடிக்கடி நானும் டெல்டாகாரன் என்று கூறுகிறார். இந்த வீர வசனம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் டெல்டாவில் குறுவை சாகுபடி பயிர்கள் எல்லாம் கருகிக் கொண்டிருக்கிறதே… அதற்கு என்ன தீர்வு கண்டீர்கள்?
பா.ஜ.க., அதிமுக கூட்டணி:
பாஜக என்ன தீண்ட தகாத கட்சியா? 1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றார்கள். சுயநினைவு இல்லாத போது முரசொலி மாறன் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.
அரசியலில் சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமையும். கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணியில் இருந்தாலும் தமிழ்நாட்டின் பிரச்னைகள் வரும்போது உரிமையை நிலைநாட்டியுள்ளோம்.
அண்ணாமலை அதிமுக பைல்ஸ் வெளியிடுவார் என்றால் வெளியிடட்டும். நாங்கள் எத்தனையோ பைல்களை பார்த்தவர்கள் தான்.
என்மீது நெடுஞ்சாலையில் 4,800 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக திமுக அமைப்பாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு போட்டார். உச்சநீதிமன்றத்தில் நான் இந்த வழக்கை தொடர்ந்தே ஆக வேண்டும் என்று மனு அளித்தேன். பின்னர் ஆர்.எஸ் பாரதி இந்த வழக்கை திரும்ப பெறுவதாக கூறினார். ஆனால் விடாப்பிடியாக அந்த வழக்கை நடத்தி தீர்ப்பு பெற்றுள்ளேன்.
எங்களுக்கு மடியில்ல கனமில்லை. நாங்கள் ஒன்றும் திமுகக்காரர் மாதிரி நெஞ்சுவலி என்று மருத்துவமனையில் போய் படுக்கவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தொடங்கியது ஆசியக்கோப்பை: தடுமாறும் பாகிஸ்தான்
சிலிண்டர் விலை: 500 ரூபாய் குறைத்த புதுச்சேரி முதல்வர்!