எடப்பாடி அனுப்பிய நோட்டீஸ்: பன்னீர் தந்த பதில்!

அரசியல்

அதிமுக தலைமை அனுப்பிய நோட்டீஸுக்கு பன்னீர்செல்வம் இன்று பதில் அளித்துள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் தனித்தனியாக நிர்வாகிகளையும் நியமித்து வருகின்றனர். அதிமுக தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை, கடந்த 21ஆம் தேதி சென்னை வேப்பேரி ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் கூட்டியிருந்தார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக ”அவர், தனிக்கட்சி தொடங்கட்டும்” என்று பேசியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் இருந்து பதிலடியும் கொடுக்கப்பட்டது.

அதேநேரத்தில், பன்னீருக்குப் போட்டியாய் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். நாளை (டிசம்பர் 27) இக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில்தான், அதிமுகவினுடைய கட்சிக் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவி ஆகியவற்றைப் பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு கடந்த டிசம்பர் 22ஆம் தேதி பன்னீர்செல்வத்துக்கு, அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீஸுக்கு பன்னீர்செல்வம் இன்று (டிசம்பர் 26) தனது வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பியிருக்கிறார்.

அதில், ’அதிமுகவை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினார்களோ, அதற்கு நேர்மாறாக சட்டவிதிகளுக்கு எதிராக தற்போது எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தகுதிநீக்கம் செய்ய முடியும். பொதுக்குழுவால் தகுதி நீக்கம் செய்ய முடியாது’ என அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில், ‘ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இதுபோன்ற நோட்டீஸ் அனுப்புவது சட்ட விரோதம்’ என அதில் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

யாத்திரையை நிறுத்த உளவுத்துறை: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

எல்லைப் பிரச்சினை: தீர்ப்புக்கு முன்பு தீர்வு சொன்ன உத்தவ் தாக்கரே

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *