ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை என எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 12) தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மற்ற கட்சிகளை விட அதிமுக கூட்டணிக்கு கடைசி நேரத்தில் தான் பாஜக ஆதரவு கொடுத்தது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ஈரோட்டில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஈரோடு அருகே வில்லரசம்பட்டி தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், ”ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவதில்லை.
இடைத்தேர்தலுக்காக பிப்.19, 20ம் தேதிகளில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய உள்ளார். ஏற்கனவே அறிவித்ததுபோல பிப்ரவரி 15, 16, 17, 24, 25 ஆகிய நாட்களில் அதிமுக வேட்பாளருக்காக நான் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பயிற்சி ஆட்டத்தை கைவிட்ட ஆஸ்திரேலியா : எச்சரித்த சேப்பல்
டாடா – வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் கதை!