மேகதாது விவகாரம்: திமுக அரசை எச்சரித்த எடப்பாடி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் வழங்கக்கோரி கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார், மத்திய நீர்வழித்துறை அமைச்சர் கஜேந்தர் சிங் ஷெகாவத்துக்கு கடிதம் எழுதியதை திமுக அரசு எதிர்க்காததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில துணை முதலமைச்சர்‌ சிவக்குமார்‌ மத்திய நீர்வழித்‌ துறை அமைச்சர்‌ கஜேந்திர சிங்‌ ஷெகாவத்துக்கு 20.06.2023 அன்று எழுதியுள்ள கடிதம்‌ மிகவும்‌ அதிர்ச்சி அளிக்கிறது.

அக்கடிதத்தில்‌, காவிரியின்‌ குறுக்கே மேகதாது அணை கட்டும்‌ திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல்‌ அளிக்க வேண்டும்‌ என்றும்‌, மேகதாது அணை விவகாரத்தில்‌ தமிழக அரசு இரட்டை வேடம்‌ போடுவதாகவும்‌, தமிழ்‌ நாட்டில்‌ இரண்டாம்‌ ஒகேனக்கல்‌ கூட்டுக்‌ குடிநீர்‌ திட்டம்‌ உள்ளிட்ட பல்வேறு குடிநீர்‌ திட்டங்கள்‌ சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுவதாகவும்‌, அத்திட்டங்களை நியாயப்படுத்தும்‌ தமிழ்‌ நாடு அரசு, மேகதாது அணை கட்டும்‌ திட்டத்திற்கு மட்டும்‌ அனுமதி அளிக்காமல்‌ எதிர்ப்பு தெரிவிக்கும்‌ இரட்டை நிலையை எடுத்திருப்பதாகவும்‌ குற்றம்‌ சாட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இரண்டாம்‌ ஒகேனக்கல்‌ கூட்டுக்‌ குடிநீர்‌ திட்டம்‌, உச்சநீதிமன்றத்‌ தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வரும்‌ நீர்‌ பிலிகுண்டுலுவில்‌ அளவிடப்பட்டு, அதன்பிறகு ஒகேனக்கல்லுக்கு வரும்‌ தமிழகத்தின்‌ பங்கு நீரைக்கொண்டுதான்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்‌ நாட்டில்‌ இரண்டாம்‌ ஒகேனக்கல்‌ கூட்டுக்‌ குடிநீர்‌ திட்டம்‌ சட்டவிரோதமாக செயல்படுத்தப்படுகிறது என்பதே அப்பட்டமான பொய்யாகும்‌. தமிழகத்திற்கு வரும்‌ நீரில்‌ தமிழகம்‌ செயல்படுத்தும்‌ குடிநீர்‌ திட்டங்களை குறை சொல்ல கர்நாடகத்திற்கு எந்த உரிமையும்‌ கிடையாது.

கர்நாடகாவில்‌ மீண்டும்‌ காங்கிரஸ்‌ ஆட்சி அமைந்ததைத்‌ தொடர்ந்து, மேகதாதுவின்‌ குறுக்கே அணை கட்டியே தீருவோம்‌ என்று துணை முதலமைச்சர்‌ சிவக்குமார்‌ காவிரி பிரச்சனையை பெரிதுபடுத்தி வருகிறார்‌.

திமுக ஆட்சி செய்யும் போதெல்லாம்‌ தமிழகத்தின்‌ உரிமைகளை விட்டுக்‌ கொடுப்பது வாடிக்கை. கச்சத்‌ தீவு, காவிரி என ஆரம்பித்தது இன்று வரை நீடிக்கிறது. மேகதாதுவில்‌ அணை கட்டியே தீரப்படும்‌ என்றும்‌, அதற்காக 9 ஆயிரம்‌ கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு செய்யப்படும்‌ என்றும்‌, கர்நாடக காங்கிரஸ்‌ கட்சி தனது தேர்தல்‌ பரப்புரையில்‌ தெரிவித்திருந்தது.

அப்போதே காங்கிரஸ்‌ கூட்டணியில்‌ இருந்த விடியா திமுக அரசு அதை கண்டித்திருக்க வேண்டும்‌. ஆனால்‌, கர்நாடகத்தில்‌ உள்ள தங்களின்‌ குடும்பத்‌ தொழில்கள்‌ பாதிக்கப்படும்‌ என்ற பயத்தில்‌, மேகதாது அணை கட்டும்‌ விவகாரத்தில்‌ கை கட்டி, வாய்‌ பொத்தி, பேசா மடந்தையாக வேடிக்கை பார்த்த விடியா திமுக அரசையும்‌, சந்தர்ப்பவாத முதலமைச்சர்‌ ஸ்டாலினையும்‌ வன்மையாகக்‌ கண்டிக்கிறேன்‌.

கர்நாடக மாநிலத்தில்‌ காங்கிரஸ்‌ கட்சி ஆட்சிப்‌ பொறுப்பேற்ற உடனேயே, துணை முதலமைச்சர்‌ சிவக்குமார்‌ தலைமையில்‌ 30.5.2023 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில்‌ அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.
விடியா திமுக அரசின்‌ பொம்மை முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ சிவக்குமாருக்கு அப்போதே தக்க பதிலடி கொடுத்திருந்தால்‌, அவர்‌ இன்று இத்தகையை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கமாட்டார்‌.

கர்நாடகாவில்‌, காங்கிரஸ்‌ வெற்றிபெற வேண்டும்‌ என்று திமுக, தமிழக காங்கிரஸ்‌, மற்றும்‌ கூட்டணிக்‌ கட்சியினர்‌, கர்நாடகாவிற்கு அழையா விருந்தாளிகளாகச்‌ சென்று தேர்தல்‌ பரப்புரையை மேற்கொண்டனர்‌. காங்கிரஸ்‌ கட்சி வெற்றி பெற்ற பின்னர்‌ நடைபெற்ற பதவியேற்பு விழாவில்‌ கலந்துகொண்டு, கர்நாடக மாநில காங்கிரசுக்கு சாமரம்‌ வீசினார்கள்‌.

எனவே, தமிழகத்தில்‌ விடியா திமுக ஆட்சியின்‌ சூழ்நிலையை, கர்நாடக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்‌ என்ற ஒரே எண்ணத்துடன்‌, அம்மாநில துணை முதலமைச்சர்‌ சிவக்குமார்‌ 20.8.2023 அன்று மத்திய நீர்வழித்‌ துறை அமைச்சருக்கு கடிதம்‌ எழுதிய கையோடு 30.6.2023 அன்று மத்திய அமைச்சர்‌ தி கஜேந்திர சிங்‌ ஷெகாவத்‌தை நேரில்‌ சந்தித்து, மேகதாதுவில்‌ காவிரியின்‌ குறுக்கே அணை கட்ட அனுமதிக்க வேண்டும்‌ என்று வற்புறுத்தியதாக பத்திரிகைகளில்‌ செய்தி வெளிவந்துள்ளது.

எனவே, இனியாவது கர்நாடகத்தின்‌ தந்திரத்தைப்‌ புரிந்துகொண்டு, இந்த விடியா திமுக அரசு, ஊழல்‌ செந்தில்பாலாஜியை அமலாக்கத்‌ துறையினரின்‌ பிடியில்‌ இருந்து காப்பாற்ற வேண்டும்‌ என்று காலம்‌ கழிப்பதை விட்டுவிட்டு,

மேகதாது பிரச்சனையுடன்‌, தமிழகத்தில்‌ தற்போது காணப்படும்‌ விலைவாசி உயர்வு, வேலையின்மை பிரச்சனைகளைத்‌ தீர்க்கவும்‌, அனைத்துத்‌ துறைகளிலும்‌ தலைவிரித்தாடும்‌ கமிஷன்‌, கலெக்ஷன்‌, கரப்ஷன்‌ போன்றவைகளை கைவிட்டுவிட்டு, மேட்டூரில்‌ தண்ணீர்‌ திறக்கப்பட்டு 20 நாட்கள்‌ ஆனபின்னும்‌ டெல்டா மாவட்டங்களின்‌ கடைமடை வரை தண்ணீர்‌ சென்றடையாமல்‌ சிரமப்படும்‌ விவசாயிகளின்‌ வேதனைகளிலும்‌ கவனம்‌ செலுத்தி தீர்வு காண வேண்டும்‌ என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்‌” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts