அரசு விளம்பர பேனர் ஊழல்: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார்!
”தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஆளுநர் மிக மோசம் என்பார்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 23) சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, வடகிழக்கு பருவமழை பாதிப்பு மற்றும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு ஊழல் புகார் குறித்து ஆளுநரிடம் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் நடைபெறும் மோசமான சம்பவங்களை ஆளுநர் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக ஆளுநரை சந்தித்தோம். திமுகவின் 18 மாத கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள்தான் உள்ளன. இன்றைக்கு திறமையற்ற பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருப்பதால், இதுபோன்ற நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கோவை சிலிண்டர் கார் வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. அதனாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதே அரசில்தான் கள்ளக்குறிச்சியில் வன்முறை சம்பவம் நடைபெற்றது.
இதையெல்லாம் சுட்டிக்காட்டித்தான் தமிழக ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். அதிமுக அரசு காலத்தில் எல்லா மருத்துவமனைகளுக்கும் குறையில்லாமல் மருந்துகளை வழங்கி வந்தோம். ஆனால், இன்றைக்கு திறமையற்ற திமுக அரசால் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதுபோல் உள்ளாட்சி அமைப்புகளில் மெகா ஊழல் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசின் விளம்பர பேனர்கள் அடிப்பதிலேயே மெகா ஊழல் நடைபெற்றுள்ளது குறித்தும் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். இவற்றையெல்லாம் படித்துப் பார்த்து விசாரிக்கிறேன் என ஆளுநர் தெரிவித்தார். திமுகவுக்கு ஜால்ரா அடித்தால் அவர்கள் நல்லவர்கள். அதுவே இதுபோன்று தவறுகளைச் சுட்டிக்காட்டினால் ஆளுநர் மிக மோசம் என்பார்கள்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
திமுகவின் இளைஞர் அணி செயலாளர்: உதயநிதி மீண்டும் நியமனம்!
எழுத்தாளர்களுக்கு வீடு: தமிழக அரசுக்கு ரவிக்குமார் அட்வைஸ்!