எனக்கும் வேலுமணிக்கும் பிரச்சனையா? – அண்ணாமலையை விளாசிய எடப்பாடி

அரசியல்

“எனக்கும் வேலுமணிக்கும் பிரச்சனை என்று திட்டமிட்டே அண்ணாமலை குழப்பத்தை விளைவிக்கிறார்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 8) தெரிவித்துள்ளார்.

சேலம் ஓமலூர் அதிமுக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,

“சட்டமன்ற தேர்தல் வேறு. நாடாளுமன்ற தேர்தல் வேறு. அதிமுக வளர்ந்து தான் வருகிறது. ஒரு சில தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது. வரும் காலங்களில் அது சரிசெய்யப்படும்.

ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி என்பது மாறுபடும். தேர்தல்களில் சூழ்நிலைக்கு ஏற்பவாறு வெற்றி தோல்வி அமையும்.

1991-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக 2 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றது. 1996-ஆம் ஆண்டு அதிமுக 4 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. திமுக, அதிமுக கட்சிகள் அழிந்து போய்விட்டதா?

2014-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதுபோல தான் அவ்வப்போது மாறி மாறி அரசியல் சூழல் வரும்.

அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற சசிகலாவின் பேச்சு முடிந்துபோனது. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிரிகளோடு சேர்ந்து ஒரு குழப்பத்தை தொடர்ந்து விளைவித்துக்கொண்டிருக்கிறார்.

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும்.

அண்ணாமலைக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? வேண்டுமென்றே எனக்கும் வேலுமணிக்கும் பிரச்சனை என்று திட்டமிட்டு குழப்புகிறார்.

கோவையில் 2014-ஆம் ஆண்டு பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதை விட அண்ணாமலை குறைவான வாக்குகளை தான் பெற்றுள்ளார்.

அண்ணாமலை என்னென்னவோ கனவு கண்டிருப்பார். அவரது கனவு பலிக்காததால், ஆதங்கத்தை வெளிப்படுத்தி அதிமுகவை விமர்சிக்கிறார்.

அண்ணாமலையை போல பல பேர் அதிமுக அழிந்துபோகும் என்று சொல்லியிருக்கார்கள். இவரை போல பல பேரை நாங்கள் பார்த்துவிட்டோம்” என்றார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம் என்று வேலுமணி பேசியது குறித்து பதிலளித்த எடப்பாடி, “பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்திருந்தால், போயிருந்தால் என்பதை பற்றியெல்லாம் கவலையில்லை. அப்படி பார்த்தால் திமுக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்று கூட சொல்லலாம். வேலுமணி பேசியதை திரித்து செய்தி வெளியிட்டுள்ளார்கள்” என்று கூறினார்.

தொடர்ந்து, பாஜக தனிப்பெரும்பான்மை பெறாதது குறித்த கேள்விக்கு, “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நல்ல கட்சி நிர்வாகிகளை வைத்திருந்தால் தனிப்பெரும்பான்மை பெற்றிருப்பார்கள். தமிழகத்தில் இருப்பதை போல பல மாநிலங்களில் தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் பாஜக பெரும்பான்மை பெற முடியாமல் போயிருக்கிறது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக வாக்கு சதவிகிதம் சரிந்ததா? – எடப்பாடி தந்த விளக்கம்!

‘ரயில்’ ஆக மாறிய ‘வடக்கன்’: ரிலீஸ் எப்போது?

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *