“செந்தில் பாலாஜிக்கு ஆயுள் முழுவதும் சிறை தான்”: கரூரில் எடப்பாடி காட்டம்!

அரசியல்

“செந்தில் பாலாஜி ஆயுள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளார்.

கரூரில் அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டம் என்பதால், அவரைப் பற்றி பேசுவார் என்று அதிமுகவினர் மட்டுமல்லாமல் திமுகவினர் மத்தியிலும் எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல, செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியபோது,

“திமுகவுக்காக இரவும் பகலும் பாராமல் உழைத்தவர்கள் ஓரம்கட்டப்பட்டிருக்கிறார்கள். ஆனால், செந்தில் பாலாஜி ஒரே ஆண்டில் இரண்டு கட்சிகளில் இரண்டு சின்னத்தில் போட்டியிட்டவர், அவர் திமுகவின் செயல் வீரராம். ஐந்து கட்சிகளுக்கு மாறியுள்ளார். ஆனால் அவரை சிறந்தவர், வல்லவர் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டுகிறார். அவர் ஆயுள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, சட்டமன்றத்தில் திமுகவை என்னென்ன பேசினார் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று எடப்பாடி தெரிவித்தார். மேலும் 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது செந்தில் பாலாஜியை ஸ்டாலின் விமர்சித்து பேசிய வீடியோவையும், சட்டமன்றத்தில் திமுகவினரை செந்தில் பாலாஜி விமர்சித்து பேசிய வீடியோவையும் ஒளிபரப்பு செய்தார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவைப் பொறுத்தவரை மதம், மொழி, இனம் என்ற அடிப்படையில் வேறுபட்டு மக்களை பிரிக்கக்கூடாது என்பது எங்களது திண்ணமான முடிவு. சிறுபான்மை மக்களை அரண் போல் காக்கின்ற கட்சி அதிமுக.

மத்திய அரசு சிஏஏ சட்டத்தை கொண்டுவந்தபோது எங்களது மாநிலங்களவை உறுப்பினர் அன்வர் ராஜாவும், மக்களவையில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனும் அதை எதிர்த்து பேசினர். திமுகவினர் கூட சிஏஏ சட்டத்தை எதிர்த்து பேசவில்லை” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காமெடி சேனல்ல அரசியல் பேட்டி: அப்டேட் குமாரு

மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் மீது சட்ட நடவடிக்கை: எச்சரித்த சு.வெங்கடேசன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0