செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்தால் தேர்தல் நேரத்தில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 28) தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தவுடன் உன் தியாகம் பெரிது, உறுதி அதனினும் பெரிது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தவரை தியாகி என்று பாராட்டுவாரேயானால், தியாகம் என்ற சொல்லுக்கே மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போய்விட்டது.
நாடு சுதந்திரம் பெறுவதற்காக தன் உயிரை அர்ப்பணித்தவர்களை தான் தியாகி என்று சொல்லுவார்கள். செந்தில் பாலாஜியை தியாகி என்று சொல்வது வெட்கக்கேடானது.
திமுகவை வளர்ப்பதற்காக போராடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இதுபோன்ற தியாக பட்டம் கிடைக்காது. பல கட்சிகளுக்கு போய்விட்டு வந்தவருக்கு தான் தியாக பட்டம் கிடைக்கும். அவர் அமைச்சராக இருந்தபோது மேல்மட்டத்தை நன்றாக கவனித்திருப்பார் போலிருக்கிறது. அதனால் தான் இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுவதாக செய்திகள் வருகிறதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்சியையும் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் மிகவும் விழிப்பாக இருப்பவர்கள். ஊழல் வழக்கில் சிறையில் இருந்து வெளியில் வந்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் தேர்தல் நேரத்தில் தக்கப்பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
துணை முதல்வர் பதவிக்கு டிஎன்பிஎஸ்சி எக்ஸாமா? – ஈஸ்வரன் கேள்வி!
“திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம்” – பவள விழா கூட்டத்தில் திருமா