செயற்கையான மின் தட்டுப்பாட்டை அரசே ஏற்படுத்துகிறதா? : எடப்பாடி

அரசியல்

வெளி மார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை அரசே ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஜூன் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்கள் தாங்க முடியாத அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் மின்சார வாரியத்திற்கு 2021-2022ம் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன என்று ஏற்கெனவே எனது முந்தைய அறிக்கையில் தெளிவாகக் கூறியிருந்தேன்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் நிர்வாகத் திறனற்ற இந்த திமுக அரசு, எந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தாமல், செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வெளியில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கி, தமிழக மின்சார வாரியத்திற்கு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தற்போது வணிக நிறுவனங்களும், சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளும் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில், மீண்டும் அவர்களுக்கு இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்திய நிர்வாகத் திறனற்ற திமுக அரசுக்கும், அதன் பொம்மை முதல்வருக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின் வாரியம் என்பது லாப நஷ்டம் பார்த்து இயங்கக்கூடிய வணிக நிறுவனம் அல்ல. இது ஒரு சேவைத் துறை. குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் விலையில்லாமலும், மானிய விலையிலும் மின்சாரத்தை வழங்க வேண்டும்.

அதேபோல், வணிக நிறுவனங்களுக்கும், அவர்களது தொழில் பாதிக்காத அளவுக்கு மின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். இதைத்தான் அதிமுக அரசு 8 வருடங்களாக செயல்படுத்தி, தமிழக மக்களுக்கு மின் கட்டண உயர்வே இல்லாமலும், மின் வெட்டு இல்லாமலும், மின்சார வாரியத்தின் இழப்பை மாநில அரசின் நிதியைக் கொண்டு சரிசெய்து வந்தது.

ஆனால், தங்களுக்குத் தேவை என்றால் மத்திய அரசை துணைக்கு அழைத்துக்கொள்ளும் நிர்வாகத் திறனற்ற இந்த திமுக அரசு, இரண்டாவது முறையாக இப்போது உயர்த்தியுள்ள இந்த மின் கட்டண உயர்வுக்கும், 9.11.2021-ம் நாளிட்ட மத்திய அரசு ஆணையையும், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டுள்ளது. பொதுவாக மத்திய அரசு, எரிபொருள் மற்றும் கொள்முதல் விலைக்கேற்ப வருடந்தோறும் மின் கட்டணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் கூறும்.

இழப்பு ஏற்பட்டால் மாநில அரசின் நிதியைக் கொண்டு சரி செய்தும் கொள்ளலாம். கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதிமுக அரசு அதன்படியே 8 ஆண்டுகளாக மின் வாரியத்தின் இழப்பை மக்கள் தலையில் சுமத்தாமல், மின் வாரியத்திற்கு மானியம் வழங்கி மின் கட்டண உயர்வு இல்லாமல் நிர்வாகத் திறமையுடன் ஆட்சி செய்தது.

edappadi palanisamy condemns eb bill hiked

ஆட்சிக்கு வந்த உடனே, பல மடங்கு மின் கட்டண உயர்வை அமலுக்குக் கொண்டு வந்த இந்த திமுக அரசு, ஒரு வருடத்திற்குள் மீண்டும் வீட்டு இணைப்பு, வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு என்ற செய்தியை முதலில் வெளியிட்டது.

ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக மக்கள் அனைவரின் எதிர்ப்பையும் பார்த்தவுடன், வீட்டு இணைப்பு தவிர வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று இன்றுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அதுவும், இந்தக் கோடை காலத்தில் மின் வெட்டால் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் மாநிலம் முழுவதும் தினமும் பல இடங்களில் மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

துறைதோறும் கமிஷன் அடிப்பதையே கொள்கையாகக் கொண்ட இந்த திமுக அரசு, வெளி மார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

edappadi palanisamy condemns eb bill hiked

அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்ததை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒருமுறை மின் கட்டணத்தைக் கணக்கிடுவோம் என்று சொன்ன இந்தத் திறமையற்ற அரசு, மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு முறை மின் கட்டண உயர்வு என்ற சுமையை தமிழக மக்களின் தலையில் ஏற்றியுள்ளது.

மக்களுக்குத் தேவையில்லாமல் கட்டணச் சுமையை ஏற்றும்போதெல்லாம், குறிப்பாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளாட்சிக் கட்டணங்கள் உயர்வு, மறைமுக பேருந்துக் கட்டணம் மற்றும் ஆவின் பால் விலை உயர்வு என்று கட்டணத்தை உயர்த்தும்போது, வசதியாக மத்திய அரசையும், இதர மாநிலங்களையும் திமுக அரசு துணைக்கு அழைத்துக் கொள்கிறது.

மத்திய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை, அதிமுக ஆட்சிக் காலங்களில் செய்தது போல் மாநில அரசே ஏற்றுக்கொண்டிருக்கலாம். அதேபோல், வாக்காளர்கள் தமிழகத்தில் ஆட்சி செய்யத்தான் வாக்களித்தார்களே தவிர, மற்ற மாநிலங்களை ஆள்வதற்கு அல்ல.

எனவே, இனியாவது மத்திய அரசையும், அண்டை மாநிலங்களையும் துணைக்கு அழைப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியைத் தர முடியாத நிர்வாகத் திறமையற்ற திமுக அரசு, வாக்களித்த மக்களுக்கு மேலும் மேலும் கட்டணச் சுமையை ஏற்றி துரோகம் செய்ய வேண்டாம் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

பாம்பு கடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு!

அண்ணாமலை டிராமா விரைவில் முடியும்: எஸ்.வி.சேகர்  பேட்டி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *