அன்று பூஜ்ஜியம்… இன்று பாஜகவுடன் கூட்டணியா? – ராமதாஸை விமர்சித்த எடப்பாடி

அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் குறித்து சேலம் மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 23) ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வேடந்தாங்கல் பறவை போல அன்புமணி ராமதாஸ் அடிக்கடி கூட்டணியை மாற்றுகிறார். வேடந்தாங்கலில் தான் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவை வரும். தண்ணீர் வற்றிய பிறகு போய்விடும். அப்படித் தான் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ஒரு பேட்டியில் பாஜக அரசுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுப்பீர்கள் என்று ராமதாஸிடம் கேட்டபோது பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுப்போம் என்று கூறினார். இப்போது அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியை ஆதரிப்பது தான் பாமக.

அதிமுகவை பொறுத்தவரை நாங்கள் கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணி கட்சிகள் வந்தால் வரவேற்போம். கூட்டணி கட்சிகள் வரவில்லை என்றாலும், எங்களுடைய சொந்த பலத்தில் வெற்றி பெறுவோம்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவிவிட்டு எங்களுடைய முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்தார்கள். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மத்தியில் இருக்கக்கூடிய வருமான வரித்துறை எங்கள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்தினார்கள்.

திமுக அரசில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் தான் இப்போது அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறார்கள். அமலாக்கத்துறை ரெய்டுக்கு காரணம் திமுக தான்.

புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கும்போது தான் அந்த கட்சி வளர்ச்சி அடையும். அந்த அடிப்படையில் எங்கள் கட்சியில் புதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்

இந்த தேர்தலில் நாங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்து பேசிய எடப்பாடி, “ஒரு ரூபாய் செலவு செய்ய முடியவில்லை என்றால் டீ கூட குடிக்க முடியாது. ஒரு சாதாரண தண்ணீர் பாட்டில் கூட 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பத்திரிகைகளில் பரபரப்பாக செய்தி வெளியாக வேண்டும் என்று அண்ணாமலை அப்படி பேசுகிறார்” என்றார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜக 4% தான்… போட்டி திமுக, அதிமுகவுக்கு இடையிலதான்! – எஸ்.பி. வேலுமணி

மதுபான வழக்கு: கவிதாவுக்கு ED கஸ்டடி நீட்டிப்பு!

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *