“எனது ஆலோசனையின்படி, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளை வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய திமுக அரசு அனுப்பியிருந்தால் இன்று வாயு கசிவு ஏற்பட்டிருக்காது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை எண்ணூர் கோரமண்டல் உர தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் அப்பகுதியில் வசித்த 30-க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,
“மிக்ஜாம் புயல் பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்த கச்சா எண்ணெய் மழை வெள்ளத்திலும் கடலிலும் கலந்து மீனவ மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது.
மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது பணிகளைச் செவ்வனே செய்திருந்தால் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்றும், மீனவ மக்கள் பாதிப்படைந்திருக்க மாட்டார்கள் என்றும் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
இனியாவது மாசு கட்டுபாட்டு அதிகாரிகள் தங்களது பணிகளை துரிதமாகவும் பொறுப்புடனும் செய்திட வலியுறுத்தியிருந்தேன்.
எனது ஆலோசனையின்படி, திமுக அரசு செயல்பட்டு, உடனடியாக மாசு கட்டுபாட்டு அதிகாரிகளை வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தால், நேற்று நள்ளிரவு கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் நடைபெற்ற அம்மோனியம் வாயு கசிவு விபத்து நடைபெற்றிருக்காது.
ஆனால், எப்போதும் போல் திமுக அரசு எங்களது ஆரோக்கியமான ஆலோசனைகளை காது கொடுத்து கேட்காதது போல், மேலே குறிப்பிட்ட எனது ஆலோசனையையும் காற்றிலே பறக்கவிட்டது.
ஏறத்தாழ இதுபோன்றே 40 ஆண்டுகளுக்கு முன் போபால் பூச்சிக்கொல்லி உரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு விபத்து போன்றதுதான் இதுவும்.
கடவுள் அருளால் நேற்று நள்ளிரவு விஷ வாயு வெளியேறிய விபத்தில், உயிர்பலிகள் இல்லாமல் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். இனியாவது திமுக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மக்கள் நலப்பணிகளில் தீவிரப் பணியாற்ற வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்திரை: ஜனவரி 14-ல் மணிப்பூரில் துவக்கம்!
தென்மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!