“திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 9) தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை விமர்சித்ததாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, முன்னாள் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
“மக்களுக்காக வாழ்ந்த தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுகவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாததால் தான் எம்ஜிஆரைப் பற்றி ஆ.ராசா அவதூறாக பேசியிருக்கிறார். ஆ.ராசாவுக்கு நாவடக்கம் தேவை.
தீயசக்தி திமுகவை அழிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் சொன்னார். அவர் சொன்னது இன்று நிஜமாகிக்கொண்டு இருக்கிறது.
1967-ஆம் ஆண்டு தேர்தலில் எம்ஜிஆர் முகத்தை காட்டியதனால் தான், லட்சக்கணக்கான வாக்குகள் விழுந்து திமுக ஆட்சிக்கு வந்தது. இன்றைக்கு திமுக பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய அண்ணன் துரைமுருகன் ஒரு மேடையில் ‘என்னை வாழ வைத்த தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர்’ என்று பேசியிருக்கிறார்.
கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்தவர் ஆ.ராசா. விஞ்ஞான முறையில் ஊழல் செய்த கட்சி திமுக. இனியாவது ஆ.ராசா நாட்டுக்கு சேவையாற்றிய தலைவரை இழிவாக பேசுவதை நிறுத்திவிட்டு நல்லதை பேசுங்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுவார். அவரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்ஜிஆரை விமர்சனம் செய்தால் இது தான் தண்டனை என்பதை அவர் உணர வேண்டும்.
தமிழகத்தில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக தான். அந்த 30 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்தது.
ஏழை, எளிய மக்கள் உயர்கல்வி படிக்கக்கூடிய நிலையை உருவாக்கி தந்தது அதிமுக அரசு. அதிமுக அரசு கொண்டுவந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை திமுக அரசு முடக்கிவைத்திருக்கிறது.
90 சதவிகித பணிகள் நிறைவடைந்துவிட்டது. 10 சதவிகித பணிகள் 2 ஆண்டுகள் 8 மாதம் ஆமை வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் இந்த தேர்தலில் இந்த பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வந்தோம். அரசியல் காழ்ப்புணர்சிக்காக அம்மா மினி கிளினிக்கை மூடிவிட்டார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் 8 மாதங்கள் ஆகிறது. இதுவரை எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா நடத்துகிறார்கள்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளும் அதிமுக வெற்றி பெற உழைக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சன் டிவி தொடர்ந்த வழக்கு: கோர்ட்டில் ஆஜரான திருமாவளவன்
மனைவியை சாடிய தந்தை : கோபத்தில் கொந்தளித்த ஜடேஜா
Edappadi palanisamy condemned a raja