ஆறுகுட்டியை நம்பி அதிமுக இல்லை: எடப்பாடி பழனிசாமி

அரசியல்

“முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியை நம்பி அதிமுக கட்சி இல்லை” என முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கோவை பயணத்தில் இருக்கும் நிலையில், பொள்ளாச்சியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி திமுகவில் இணைந்துள்ளார்.

இந்த சூழலில் கோவை விமான நிலையத்தில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அவர், ”திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதிலும் ரத்து செய்வதிலும் ஆர்வம் காட்டிவருகிறது.

கோவை மாநகராட்சியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சுமார் 150 கோடி மதிப்பில் 500க்கும் மேற்பட்ட பணிகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

திமுக ஆட்சியில் 18 சதவிகிதம் கமிஷன் கேட்டதால் எந்த ஒப்பந்ததாரரும் பணியை எடுப்பதற்கு முன்வரவில்லை.

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை பொறுத்தவரை 50 சதவிகித பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனையும் இந்த அரசு கைவிட இருக்கிறது. அதற்குக் காரணம், தமிழக முதல்வருக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் நிறுவனம், எல் அண்ட் டி சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது.

அந்த இடத்துக்கு பேருந்து நிலையத்தை மாற்றினால், அங்குள்ள நிலங்கள் அனைத்தும் அதிக விலை போகும் என்பதால்தான் வெள்ளலூரிலிருந்து பேருந்து நிலையம் மாற்றப்படுகிறது.

இதனால் மக்களுடைய வரி பணம் வீணடிக்கப்படுகிறது. வெள்ளலூர் பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.

edappadi palanisamy companies

அதுபோல் கோவை மெட்ரோ ரயில் திட்டமும், ஸ்மார்ட் சிட்டி திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும்.

இந்த அரசின் மெத்தன போக்கினால் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. எந்த திட்டத்தையும் திமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கும் போதுமான நிதி ஒதுக்காத காரணத்தினால் அதுவும் முடங்கி இருக்கிறது.

மேலும், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது கூறிய பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம், முதியோர் ஓய்வூதிய உயர்வு, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாமல் உள்ளது.

திமுக ஆட்சியில் எதற்கெடுத்தாலும் குழு அமைக்கப்படுகிறது. இதுவரை 38 குழுக்கள் அமைத்து சரித்திரம் படைத்துள்ளார். ஒருவேளை, இந்த 38 குழுக்களையும் கண்காணிப்பதற்கும் ஒரு குழு அமைக்கப்படும்.

சட்ட ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் தாராளமாக கிடைக்கிறது. இதற்கான தக்க பாடத்தை அடுத்த தேர்தலில் மக்கள் புகட்டுவார்கள்” என்றவரிடம்,

”முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி திமுகவில் இணைந்தது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர், “அவரை நம்பி அதிமுக கட்சி இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்களை நம்பித்தான் அதிமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றார்.

ஜெ.பிரகாஷ்

எடப்பாடிக்கு நிச்சயம் தண்டனை உண்டு: டிடிவி தினகரன்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *