எடப்பாடி வழக்கு: அறப்போர் இயக்கம் மேல்முறையீடு!

அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக அறப்போர் இயக்கம் மேல் முறையீடு செய்ய உள்ளது.

அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ. 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

அப்போது, நெடுஞ்சாலைத் துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் கடந்த ஜூலை மாதம் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்த செய்திகள் மற்றும் தகவல்களை பதிவிட்டிருந்தது.

இதையடுத்து அவ்வியக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று (டிசம்பர் 2) விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில்,

“எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது.

edappadi palanisamy case arapoor iyakkam appeal

ஒரு நிறுவனத்திற்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை.

டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை.

மனுதாரரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் இவ்வாறு குற்றம் சாட்டப்படுகிறது” என்று வாதிடப்பட்டது.

அப்போது அறப்போர் இயக்கம் சார்பில், “ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரைத்தான் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை.

பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

டெண்டர் குறித்த முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்ததால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பு. முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது” என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ள வழக்கில் முகாந்தரம் இருப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறான கருத்துகளையோ, உண்மைக்குப் புறம்பான ஆதாரமில்லாத கருத்துகளையோ தெரிவிக்க கூடாது என்று அறப்போர் இயக்கத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதி வழங்கிய இந்த உத்தரவை எதிர்த்து அறப்போர் இயக்கம் மேல்முறையீடு செய்ய இருக்கிறது.

இதுகுறித்து அறப்போர் இயக்கம் இன்று (டிசம்பர் 3) தன்னுடைய ட்விட்டர் பதிவில், “முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு கிருஷ்ணன் ராமசாமி இடைக்கால தடை விதித்துள்ளார்.

ஆனால் இது ஏற்கனவே பல தீர்ப்புகள் மூலம் முடிவு செய்யப்பட்ட சட்ட நிலைப்பாட்டிற்கு புறம்பாகவும் ஏற்கனவே இதேபோன்ற வேறொரு அமைச்சர் அறப்போர் இயக்கத்தின் மீது தொடுத்த வழக்கின் ஆணைக்கு புறம்பாகவும் உள்ளது. எனவே மேல்முறையீடு செய்து இந்த தடைகளை அகற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” எனப் பதிவிட்டுள்ளது.

ஜெ.பிரகாஷ்

வெண்ணிலா கபடி குழு பட நடிகர் திடீர் மரணம் !

குற்றாலத்தில் குளிக்க தடை !

டிஜிட்டல் திண்ணை: அமலாக்கத் துறை வழக்கு; மாசெக்கள் கூட்டத்தில் ஐ. பி. ஆப்சென்ட் பின்னணி! 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *