சட்டப்பேரவையை இன்று(அக்டோபர் 17) அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு புறக்கணித்துள்ளது.
தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று(அக்டோபர் 17) தொடங்குகிறது.
கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. அத்துடன் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
இந்த நிலையில், அதிமுகவில் நிலவும் உள்கட்சிபூசலால், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நியமித்துள்ளார்.
எனவே, அவருக்கே இருக்கை ஒதுக்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்களும், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், இப்போது எதுவும் முடிவு எடுக்கக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் வலியுறுத்தி உள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் மு.அப்பாவு இன்று முடிவு எடுப்பார் எனச் சொல்லப்பட்ட நிலையில்,
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கைகளில் மாற்றம் இல்லை எனத் தகவல் வெளியாகி இருந்தது.
சட்டப்பேரவை விதியின்படி சபாநாயகருக்கு உள்ள உரிமை அடிப்படையில் இந்த கூட்டத்தொடரில் முந்தைய நிலையே தொடர சபாநாயகர் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுகவினர் புறக்கணித்துள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து அதே இடம் ஒதுக்கப்பட்டதை அடுத்து எடப்பாடிபழனிசாமி தரப்பு அதிமுகவினர் இன்று சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
பன்னீர்செல்வத்துக்கு அதே இடம் கொடுக்கப்பட்டால், சட்டமன்றத்தைப் புறக்கணிப்போம் என எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட செய்தி குறித்து மின்னம்பலத்தில் கடந்த அக்டோபர் 8ம் தேதி,
’சட்டமன்றத்தைப் புறக்கணிக்கும் அதிமுக: எடப்பாடி ஆலோசனை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
எடப்பாடி Vs பன்னீர்: இன்று சட்டமன்றத்தில் என்ன நடக்கும்?
சட்டப்பேரவை இருக்கை: பன்னீருக்கு அதே இடம்?