சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சுரண்டை சாலையில் அதிமுக 52வது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் நேற்று(அக்டோபர் 19) இரவு நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்து இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் திமுக எந்த திட்டங்களையும் செய்யவில்லை.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுகவினர் அடிக்கல் நாட்டுகிறார்கள். ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்கள்.
சங்கரன்கோவில் சுற்று வட்டாரப் பகுதியில் எந்த விதமான அடிப்படை தேவைகளையும் திமுக அரசு செய்து தரவில்லை.
தென்காசி மாவட்டம் அதிமுக ஆட்சியில் தான் உருவானது. தென்காசி ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக ஆட்சியில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 10ஆண்டுகளில் அதிமுக சங்கரன்கோவிலுக்கு எதையும் செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பொய் பேசி வருகிறார்.
கள்ளசாரயம், கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை என திமுக ஆட்சியில் தமிழ்நாடு சீர்குலைந்துவிட்டது. பெண் போலீஸ் அதிகாரிகளுக்கே இன்று பாதுகாப்பில்லை.
சளி, காய்ச்சல் என்று மருத்துவமனை போனால் வெறிநாய்க்கடிக்கு ஊசி போடுகிறார்கள். கையுடன் போனா, கையே இல்லாமல் மக்கள் வெளியே வருகிறார்கள். திமுக ஆட்சியில் இன்றைய தமிழ்நாட்டின் நிலைமை இதுதான்.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள் என அனைவரும் திமுக அரசை வெறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையெல்லாம் மறைக்க திராவிட மாடல், சனாதன ஒழிப்பு என்று திமுகவினர் பேசி வருகின்றனர். திமுக கட்சியாக செயல்படவில்லை. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போன்று செயல்படுகிறது.
தமிழ்நாட்டின் உரிமை காக்கவும், தமிழ்நாட்டிற்கு மத்தியிலே பல்வேறு திட்டங்களை பெறுவதற்கும், சிறுபான்மையின மக்கள் உரிமையை பாதுகாப்பதற்கும் அதிமுக போராடும். இதுவே எங்கள் தலைமையின் தேர்தல் முழக்கம்.
தமிழ்நாட்டு மக்கள்தான் எங்கள் எஜமானர்கள். அவர்கள் தான் வாக்களிக்கின்றனர். ஆகையால், வாக்களிக்கின்ற மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். வாக்களிக்கின்ற மக்கள் குரல் நாடாளுமன்றத்திலே ஒலிக்க வேண்டும், அதுதான் அதிமுகவின் லட்சியம்.
இப்படிப்பட்ட அதிமுகவை பார்த்து பாஜகவினுடைய பி டீம் என்று முதல்வர் கூறுகிறார். உங்களைப் போன்று மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுக நினைத்துப் பார்த்ததில்லை. முதலில், இந்தியா கூட்டணியில் யார் பிரதம வேட்பாளர் என்று தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை படுதோல்வி அடைய வைக்க வேண்டும். அதற்காக எறும்பு மற்றும் தேனீக்கள் போல சுறுசுறுப்பாய் தேர்தலில் களப்பணியாற்றி நம்முடைய வேட்பாளர்களை வெற்றிபெற செய்து, நாடாளுமன்றத்திற்கு அனுப்ப மக்கள் உறுதியெடுக்க வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
லியோ LCU தான்… கன்பார்ம் செய்த ரசிகர்கள் உற்சாகம்!
மகளிர் விடுதிகள்: 30ஆம் தேதிக்குள் பதிவு செய்ய உத்தரவு!
பெண்கள் வேலை வாய்ப்பும், ஊதிய வேறுபாடுகளும்: உலகுக்கு புதிய வழிகாட்டும் கோல்டின்