சிவகாசியில் இன்று நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், “இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கியது அதிமுக தான்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 16 மாத காலம் ஆகிவிட்டது. மூச்சுக்கு முன்னூறு முறை திராவிட மாடல் என்று கூறி வருகிறார் ஸ்டாலின்.
ஆனால் ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த மடிக்கணினி திட்டத்தை அவர் நிறுத்திவிட்டார். இதுவா திராவிட மாடல்?.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். ஆனால் 16 மாதம் ஆகியும் ரத்து செய்யப்படவில்லை. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.
பட்டாசு தொழிலுக்கு பெயர் போன சிவகாசி மக்களுக்காக அதிமுக போராடியதை யாராலும் மறுக்க முடியாது.
விருதுநகரில் மருத்துவமனை, கல்லூரிகள், பாலங்கள் என பல்வேறு திட்டங்களை அமைத்தது அதிமுக அரசு தான்.
பொன்முடி, ஆ.ராசா மீது சாடல்!
சமீபத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர், கூட்டத்தில் இருந்த பொதுமக்களை பார்த்து பேருந்தில் ஓசியில் போறீங்களா? என்று கேட்கிறார்.
டிக்கெட் காசு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?… அது மக்களின் வரிப்பணம்.
அவரது பேச்சை பார்த்து சமூகவலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, கொள்ளைப்புறம் வழியாக வந்த திமுக அரசு, ஆட்சிக்கு வந்ததும் இறுமாப்புடன் நடந்து வருகிறார்கள்.
இதற்கான தகுந்த பதிலடியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசுக்கு எதிராக மக்கள் கொடுப்பார்கள்.
முன்னாள் அமைச்சரும், தற்போது திமுக எம்பியுமான ஆ.ராசா குறிப்பிட்ட மதத்தினரை விபச்சாரி என்று குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு கேவலமான பேச்சு இது. ஆனால் சாதி, மதம் கடந்து மக்களுக்காக போராடும் கட்சி அதிமுக தான்.
தனக்கு ஓட்டுபோட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என்ற இரு போனஸ்களை கொடுத்துள்ளார்.
முன்னாடி கரண்டை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இப்போ கரண்ட் பில்லை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சியை தான் திமுக அரசு கொடுத்து வருகிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
விஜிலன்ஸ் ரெய்டு : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அன்பில் மகேஷ்