காவல் துறை அனுமதி மறுத்ததையும் மீறி இன்று (அக்டோபர் 19) எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்படதனால் காவல் துறை கைது செய்தனர்.
சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த அக்டோபர் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2வது நாளான நேற்று (அக்டோபர் 18) காலை சட்டசபை கூடியதும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற உத்தரவைச் சபாநாயகர் பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (அக்டோபர் 19) ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்தது.
இதற்காகச் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரதத்தில் ஈடுபட அனுமதி கோரி எடப்பாடி பழனிசாமி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தது.
இந்த நிலையில் இன்று நடத்தத் திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்குச் சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தது. வள்ளுவர் கோட்டம் பகுதியில் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், கோகுல இந்திரா, கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் அதிமுகவினர், தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை முழங்கினர். உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,
தடையை மீறி போராட்டம் நடத்தியதால், காவல் துறையினர் எடப்பாடி உள்ளிட்ட அதிமுகவினரை கைது செய்தனர்.
மோனிஷா
காங்கிரஸ் தலைவர் : இன்று வாக்கு எண்ணிக்கை!
எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் ஜோதிகா – மம்முட்டி ஜோடி!