எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறப்போர் இயக்கம் மீது தொடுத்த மான நஷ்ட வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2016 – 2021 அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத் துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது.
இந்தநிலையில், 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முன்னாள் முதல்வரும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில், தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த மனுவில் ” தன் மீதான அறப்போர் இயக்கத்தின் புகார் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
தன்னை பற்றி அவதூறாகப் பேச அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு கருத்துகளையோ, ஆதாரம் இல்லாத கருத்துகளையோ வெளியிடக் கூடாது” என்று இடைக்காலத் தடை விதித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சாட்சி அளிப்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 19) காலை 10.30 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி முன்னிலையில் ஆஜரானார். நீதிமன்றத்தில் அவர் சாட்சியளித்ததை அடுத்து, வழக்கை வருகிற டிசம்பர் மாதம் 11ஆம் தேதிக்கு நீதிபதி மகாலட்சுமி ஒத்திவைத்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உளுந்தூர்பேட்டை நாய்க்கு நாகூர் பிரியாணி என்றனர்… நயன்தாராவுடன் திருமணம் குறித்து விக்னேஷ் சிவன்
அடேங்கப்பா தங்கம் ரேட் இவ்வளவு உயர்ந்திருச்சா?
தலித் ஏழுமலை மருமகன் காமராஜ் கொலை வழக்கு: குற்றவாளி கல்பனாவுக்கு ஆயுள் தண்டனை!