திமுக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

Published On:

| By srinivasan

கடந்த ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் அருகே கூனிமேடு கிராமத்தில் ரூ.1,503 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு  எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

இந்த திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 692 கிராமங்கள், 2 நகராட்சிகள் என 10 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

edappadi palanisamy announces protests

இதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் துவக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த நிலையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்துள்ளார்.

“விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம், கூனிமேடு கிராமத்தில் இருந்து தினமும் 60 MLD கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைத்து,

692 கிராம குடியிருப்புகளுக்கும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் மற்றும் திண்டிவனம் SIPCOT-க்கும், தினம்தோறும் கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் 1502.72 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டன.

ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மு.க. ஸ்டாலின் அரசு, மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதளவும் இல்லாமல்,

அதிமுக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்திட்டத்தை தற்பொழுது கைவிட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய விவசாயிகள் நிறைந்த மாவட்டங்களாகும். ஆனால் தற்போது திமுக அரசு ஏழை, எளிய மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைப்பதையும் பறித்துள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்றும்; இதற்குத் தேவையான நிதியினை உடனடியாக விடுவித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில்,

கழக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம், தலைமையில் 27.08.2022 அன்று காலை 9 மணிமுதல், திண்டிவனம் காந்தி சிலை அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

க.சீனிவாசன்

தூத்துக்குடி படுகொலையும் எடப்பாடி பழனிசாமியும்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share