வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை… அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!
வெளிநாட்டு முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி, அதிமுக சார்பில் அக்டோபர் 9-ஆம் தேதி மதுரையில் உண்ணாவிர போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 28) அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று இந்த 40 மாத காலத்தில், மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து செயல்படாமல், மக்கள் மத்தியில் மாயத் தோற்றத்தை உருவாக்கி, தனது குடும்ப நலனை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்பட்டு வருவது, தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும். திமுக அரசின் இத்தகைய அலட்சியப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக-வின் தேர்தல் வாக்குறுதி எண். 185-ன்படி, இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு 2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில், 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5.50 லட்சம் பணி இடங்களில் இளைஞர்களும், பெண்களும் பணியமர்த்தப்படுவார்கள் என்று அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் வெளிநாட்டுத் தொழில் முதலீடுகள் குறித்தும், அது தொடர்பான முழு விவரங்கள் குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் அதிமுக சார்பில், அக்டோபர் 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மதுரை பழங்காநத்தம், ஜெயம் தியேட்டர், MGR திடலில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர் செல்லூர் ராஜூ ஆகியோர் துவக்கி வைப்பார்கள்.
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் V.V. ராஜன் செல்லப்பா ஆகியோர் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பார்கள். இந்த உண்ணாவிர போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏடிஎம் கொள்ளையர்கள் சென்னை வந்தது எப்படி? – நாமக்கல் எஸ்.பி விளக்கம்!