சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி புத்தூரில் இன்று (ஜனவரி 14) நடைபெற்ற பொங்கல் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செம்மலை, மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், ஜனவரி 17-ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 14) உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில்,
“அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த நாளான ஜனவரி 17-ஆம் தேதி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதே போல், எம்.ஜி.ஆர் பிறந்தநாள் அன்று அவருடைய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் அனைவரும், தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். திரு உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், ஆங்காங்கே எம்.ஜி.ஆர் திருஉருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், ஜனவரி 17 அன்று எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொங்கல் அன்னைக்கு கூட மழையா? – வானிலை மையம் கூல் அப்டேட்!
தை மாத நட்சத்திர பலன்கள்: திருவாதிரை