அதிமுக ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் பயன்படுத்துகிறார்: இபிஎஸ் தரப்பு வாதம்!

Published On:

| By Selvam

கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஓ.பன்னீர் செல்வம், தற்போது வரை தன்னை ஒருங்கிணைப்பாளராக சொல்லி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 4) வாதம் முன்வைக்கப்பட்டது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கிற்கு பதில்மனு தாக்கல் செய்ய தொடர்ந்து தாமதித்ததால், அதிமுகவின் பெயர், சின்னம் போன்றவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சதிஷ்குமார் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், “ஓ.பன்னீர் செல்வம் இன்னும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒருங்கிணைப்பாளர் என்றே பதிவிட்டு வருகிறார். அதிமுகவில் தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கிடையாது.

தற்போது கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஓ.பன்னீர் செல்வம், தற்போது வரை தன்னை ஒருங்கிணைப்பாளராக சொல்லி வருகிறார். மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே, தற்போதைய நிலையில் கட்சிக்கு சம்பந்தமில்லாத ஒரு நபர் கட்சி நடவடிக்கைகளில் தலையிடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு மார்ச் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.பி.பதவியை ராஜினாமா செய்த நட்டா: ஏன்?

மோடி சுட்ட வடைகள்: திமுகவின் ‘மாஸ்டர்’ பிரச்சாரம்!