ஓபிஎஸ் உடன் சமரசமா?: செல்லூர் ராஜூ பதில்!

அரசியல்

ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியுள்ளார்.

மதுரை மாநகர் அதிமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட உள்ள பொதுக்கூட்டங்கள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, ”ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பயந்து திமுகவின் 30 அமைச்சர்களையும் முழு நேரமும் பணியாற்ற வைத்து பரிசு பொருட்கள், 1000, 500 பணம், இறைச்சி என அனைத்தையும் வாரி இறைத்து திமுக இந்த வெற்றியைப் பெற்று இருக்கிறது.

இதனைச் சாதாரணமாகக் கிடைத்த வெற்றி என்று கருத முடியாது.

ஜனநாயகம் எவ்வளவு மோசமடைந்து உள்ளது என்பது திமுக ஆட்சியில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையம் பணியாற்ற வில்லை என நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சுமளவிற்கு ஈரோடு கிழக்கில் மக்களை அடைத்து வைத்து திமுக இதனை செயல்படுத்தி இருந்தது.

தமிழ்நாட்டின் மினி பட்ஜெட்டை செலவு செய்து திமுக ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி அடைந்து உள்ளது.

ஈரோடு மக்களும் அனைத்தையும் பெற்றுக் கொண்டு விஸ்வாசத்துடன் திமுக கூட்டணிக்கு வாக்கை செலுத்தி உள்ளனர். இதனை திமுகவினர் ஆகா ஓகோ என்று கொண்டாடக்கூடாது.

அதிமுக பெரிய வெற்றிகளையும் தோல்விகளையும் கண்டுள்ளது. வெற்றியை அடைந்தால் கொண்டாடவும் தோல்வியைக் கண்டு துவண்டு போவதும் இல்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான்காம் தரப் பேச்சாளர் என்று கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஓ. பன்னீர்செல்வம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று பேசி இருக்கிறார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார்” என்று பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பில் நீடித்தால் அதிமுக மேலும் பலவீனமடையும் என்று தினகரன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

மோனிஷா

பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்: கார்த்திக் சிதம்பரம் ஆதரவு

இணைய முடக்கம் : தொடர்ந்து இந்தியா முதலிடம்!

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *