“சாம்சங் ஊழியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்”… எடப்பாடி வலியுறுத்தல்!

அரசியல்

தொழிற்சங்கம் அமைத்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சாம்சங் ஊழியர்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (அக்டோபர் 8) இரவு 10 தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து இன்று (அக்டோபர் 9) காலை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடத்திய சிஐடியூ தலைவர் செளந்தரராஜன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில், தொழிலாளர்களை போலீசார் கைது செய்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 9) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர் – நிறுவனம் – அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், அரசு தரப்பில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வழங்கப்பட, தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நான் நாள் விடாது சுட்டிக்காட்டி வருகிறேன். அத்தகு குற்றங்களைச் செய்தவர்களை பிடிப்பதில் திமுக அரசு காட்டாத முனைப்பை, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதில் காட்டுவது ஏன்?

போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உழைப்பாளர் தினத்தன்று மட்டும் சிகப்பு சட்டை போட்டுகொண்டு, “நானும் தொழிலாளி” என்று மேடையில் மட்டும் முழங்கும் ஸ்டாலின் சிகப்பு சட்டை மீது உண்மையிலேயே மதிப்பிருக்குமாயின், இதுபோன்ற ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்குமாறு வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரூட் தல பிரச்சினையால் நேர்ந்த சோகம் : கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு!

வாழ்வும் சாவும் உங்கள் கையில்! லெபனான் மக்களுக்கு நெதன்யாகு அறிவுரை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *