பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்தநாள் விழா மற்றும் 61வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வெறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன்னிற்கு சென்று தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “முத்துராமலிங்க தேவர் இளம் வயதிலேயே நெற்றி நிறைய திருநீர் அணிந்து தெய்வ பற்று உள்ளவராக விளங்கியவர்.
எளிமையாக வாழ்ந்தவர், தேசிய தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர். நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் செல்வாக்கு உள்ளவராக விளங்கியவர். தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக போற்றி வாழ்ந்தவர். அவருக்காக எம்.ஜி.ஆர், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருப்படம் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் அதிமுகவால் திறந்து வைக்கப்பட்டது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது 13 கிலோ எடையில் தேவரின் திருவுருவச்சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை நந்தனத்தில் தேவரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த இந்த இடம் தெய்வீக பூமி. இந்த தெய்வீக பூமியில் அவருக்கு நினைவிடம் எழுப்பப்பட்டிருக்கிறது. அந்த நினைவிடத்தில் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்தநாள் மற்றும் 61வது குருபூஜையை முன்னிட்டு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கேள்வி எழுப்ப முயன்ற செய்தியாளர்களிடம் “இது ஒரு முக்கியமான பொன்னான நாள். இந்த நாளில் அரசியல் பேசுவது பொருத்தமாக இருக்காது” என்று தெரிவித்தார்.
இதனிடையே தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான வாகனங்கள் பசும்பொன்னிற்கு வந்து கொண்டிருப்பதால் இன்று காலை முதலே அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னிற்கு வரும் போது அப்பகுதியை சேர்ந்த சில அமைப்புகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். இதன் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கான்வாய் உடன் செல்லக் கூடிய வாகனங்களை தவிர்த்து வேறு வாகனங்கள் செல்லாமல் தீவிர பாதுகாப்புப் பணிகளையும் போலீசார் முடுக்கிவிட்டிருந்தனர்.
இந்நிலையில் பசும்பொன்னிற்கு செல்லும் வழியில் அபிராமம் என்ற இடத்தில் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது. அப்போது அதிமுக கட்சி தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி சென்ற வேனை சுற்றி நின்று பாதுகாப்பு அளித்தனர். தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு பிறகு போக்குவரத்து சீரானதால் எடப்பாடி பழனிசாமி பசும்பொன்னிற்கு சென்றடைந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
டெங்கு காய்ச்சலுக்கு 13 வயது சிறுவன் பலி!
பிரதமராகும் லட்சியம்? மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்!