அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை எடப்பாடி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று நேற்று (பிப்ரவரி 22) வழக்கு பட்டியலில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பை வாசித்தார்.
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக வழங்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி வாழ்க, அண்ணன் எடப்பாடியார் வாழ்க, நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடியார் என்று முழக்கமிட்டு இனிப்புகளை வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு நடைபெற்ற ஜூலை 11 அன்று அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் கலவரம் ஏற்பட்டதால் அதிமுக அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியும், உச்சநீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகத்தான் வரும் என்பதால் வெற்றியைக் கொண்டாடுவதற்குத் தயாராக இருக்க சொல்லி தொண்டர்களுக்கு வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
மாமியார், மருமகள் சண்டையால் தமிழகத்தில் வளர்ச்சியில்லை: பாஜக மாநில பொறுப்பாளர் நரசிம்மன்