‘இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை சுயவிருப்பத்துடன் தான் தேர்வு செய்தோம்’ என்று அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டு வருகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்பால் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகவும், தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்தும் நீக்கினர். இதற்கு 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழுவும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனதும் செல்லாது என்று அறிவித்தார்.
இதுதொடர்பாக பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதி அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. அதிகாரம் படைத்த பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலுடன் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இப்படி மாறி, மாறி தீர்ப்புகள் வந்த நிலையில் இரண்டு தரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
மேலும் அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.
இந்தசூழலில் நேற்று (செப்டம்பர் 20) தனது ஆதரவாளர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோருடன் டெல்லி சென்று வந்தார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் இடைக்கால பொது செயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் அபிடவிட் பெறப்பட்டு வருகிறது.
மொத்தமுள்ள 2663 உறுப்பினர்களில் 2500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களிடம் மாவட்டச் செயலாளர்கள் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ள நிலையில் தேவைப்படும் பட்சத்தில் இந்த அபிடவிட்டை தாக்கல் செய்ய வசதியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படுவதாகக் கூறப்படுகிறது.
கலை.ரா
கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு 15 நாள் சிறை : அண்ணாமலை கண்டனம்!
வேலைவாய்ப்பு : நபார்டு வங்கியில் பணி!