தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 10) சென்னை கிண்டியில் ஆளுநர் ரவியை சந்தித்து மனு அளித்தார். அப்போது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி,
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் என்சிபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு வெளிநாடுகளுக்கு மூன்று ஆண்டுகாலமாக 45 முறை போதைப்பொருள்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவரை கைது செய்தவுடன் என்சிபி அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை திரைப்படத்துறையில் முதலீடு செய்ததாகவும், திமுக நிர்வாகிகளுக்கு பணம் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிபியிடம் ஜாபர் சாதிக் நற்சான்றிதழ் வாங்கியுள்ளார். முதல்வர் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஆகியோரை சந்தித்து நிதி வழங்கியுள்ளார்.
முதல்வர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இயக்கிய படத்திற்கு தேவையான நிதியை ஜாபர் சாதிக் கொடுத்துள்ளார். மிக மிக மோசமான ஒரு நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.
போதைப்பொருளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய டிஜிபி, முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதையெல்லாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை பெற்றுத்தர வேண்டும். தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்.
ஒரு துளி போதைப்பொருள் கூட தமிழகத்தில் விற்பனையாகாமல் தடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்.
போதைப்பொருள் கடத்தலில் வந்த பணத்தில் தான் திமுக இந்த தேர்தலை சந்திப்பதாக செய்திகள் வருகின்றன. மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டதற்கு காரணம், திமுக தான்.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜாபர் சாதிக் கைது.. என்சிபி-ஐ வைத்து திமுகவை மிரட்டுகிறது பாஜக: ரகுபதி குற்றச்சாட்டு!
சீட் இல்லாமல் திமுக கூட்டணியில் தொடர்வதா? மமக முக்கிய முடிவு!