பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பு கூட்டம் வரும் ஜூலை 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கசப்பான சூடான வார்த்தை பரிமாற்றங்கள் நடைபெற்று வந்தன.
இதன் உச்சக்கட்டமாக ஜூன் 13ஆம் தேதி நடந்த அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலேயே… ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என்று கருத்து தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அக்கட்சியின் டெல்லி தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 5 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு,
“தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது அப்போது பார்த்துக் கொள்ளலாம்” என்று பதிலளித்தார்.
மேலும் அண்மையில் பிரதமர் வலியுறுத்திய பொது சிவில் சட்டம் பற்றிய கேள்விக்கு அதிமுக அதை எதிர்க்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்தப் பின்னணியில் தமிழகத்தில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில்…
டெல்லியில் ஜூலை 18 நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பு கூட்டத்துக்கு வருமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அழைப்பு அனுப்பியுள்ளது.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு இடையே ஜூலை 1 ஆம் தேதி மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டிய பன்னீர்செல்வம் கூட்டணி குறித்து பாஜக தலைவர்கள் தன்னுடன் பேசிக்கொண்டு இருப்பதாக ஒரு தகவலை அவரே வெளியிட்டார்.
ஆனால் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்திருப்பதன் மூலம் பன்னீர்செல்வத்தை பாஜக கிட்டத்தட்ட கழற்றிவிட்டு விட்டதாகவே தெரிகிறது.
வேந்தன்
“செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க ED-க்கு அதிகாரமில்லை” – கபில் சிபல்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!