சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தமிழக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
சிறுவாச்சூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் செம்மலை, ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெயசங்கரன், கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமத்துவ பொங்கல் விழாவில் 70 பெண்கள் பொங்கல் வைத்தனர். எடப்பாடி கே.பழனிசாமி சூரியனை பார்த்து வழிபாடு செய்து பின்னர் பொங்கல் வைத்தார். பின்னர் மாடுகளுக்கு பூஜை செய்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் இருந்தபோது ரூ.50 கோடியில் சிறுவாச்சூர் ஏரி புனரமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் நிறைவேறினால் எட்டு கிராமங்கள் பயன்பெறும்.
விவசாய தொழில் ஒன்றுதான் மக்களுக்கு உணவளிக்கிறது. நாடு வளம்பெற, நாட்டு மக்கள் அனைத்து வளம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். விவசாயம் என்பது சாதாரண பணி அல்ல, ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கின்றவர்கள் விவசாயிகள்.
குடிமராமத்து என்ற அருமையான திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக. பயிர்காப்பீட்டின் மூலமாக காப்பீட்டு தொகை அதிகளவில் பெற்று தந்தது அதிமுக அரசுதான். விவசாயிகள் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி அளித்தது அதிமுகதான்,
கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ரூ. 2500 வழங்கினோம்.
திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள் என்ன பலன் அடைந்தார்கள். சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உயர்த்தியும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து காக்கவும் அரசு தவறிவிட்டது
மக்காசோளம் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட போதும், மரவள்ளி கிழங்கு மாவு பூச்சியால் பாதிக்கப்பட்ட போதும் அதிமுக ஆட்சியில் இழப்பீடு வழங்கப்பட்டது.
20 மாத கால திமுக ஆட்சியில் கால்நடைப்பூங்கா பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. தலைவாசலில் தோல் தொழிற்சாலை அமைந்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிலத்தடி நீர் மாசுபடும்.
தலைவாசலில் தோல் தொழிற்சாலை அமைக்கும் எண்ணம் அரசுக்கு இருந்தால் அதை கைவிட வேண்டும். தோல் தொழிற்சாலை அமைக்க அரசு முயற்சித்தால் மக்களோடு நின்று அதிமுக போராடும்.
இந்தியாவில் பல மாநிலங்களில் டீசல் விலை குறைந்த போதிலும் தமிழ்நாட்டில் குறைக்கப்படவில்லை. டீசல் விலை ஏறினால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறும்.
பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வழங்க வலியுறுத்தியும் அரசு வழங்கவில்லை என்று கூறினார். விழா முடிவில் அங்கு வைத்திருந்த கரும்புகளை கிராமமக்கள் முண்டியடுத்து ஒடித்து செல்லும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கலை.ரா