தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பார்க்காமல் மத்திய அரசு உதவ வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக தென்மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கனமழை இன்று காலை முதல் ஓய்ந்துள்ளது. ஆனால் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதியை ஆய்வு செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அதிமுக கொண்டு வந்த திட்டத்தை செயல்படுத்தியிருந்தால் இன்றைக்கு பெய்த மழைநீர் ஓடையின் வழியே வேகமாக வடிய தொடங்கியிருக்கும். ஆனால் இந்த ஆட்சியில் பணிகள் எல்லாம் முடங்கிக் கிடக்கின்றன.
அரசு பொது மருத்துவமனையில் மழைநீர் தேங்கி நோயாளிகள் அவதிப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் நிறுத்திவைத்திருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு முகாம் அமைத்து வாகனங்களை பழுதுபார்த்துத் தர வேண்டும்.
விவசாயிகள் கனமழையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். சேதமடைந்த விவசாய நிலங்களை அரசு அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதில் மெத்தனப் போக்கை விட்டுவிட்டு துரிதமாக செயல்பட்டு ஏக்கருக்கு ரூ.25,000 தர வேண்டும்.
திருநெல்வேலியில் வெள்ளத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் அரசு தர வேண்டும். சாலைகள், தகவல் தொடர்பு எல்லாம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை உடனே சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதனையும் அரசு உடனே சீர் செய்ய வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பாதியில் நின்ற ரயிலில் உள்ளவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அவர்கள் செல்கின்ற பகுதிக்கு உரிய வாகன வசதியை செய்து தர வேண்டும்.
600 படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெறுகிறது என்று தலைமைச் செயலாளர் சொல்கிறார். ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒரு படகு கூட வரவில்லை. பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கின்ற மக்கள், ‘சாப்பிட்டு 3 நாட்கள் ஆகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் என்று யாரும் வந்து பார்க்கவில்லை’ என்று சொல்கிறார்கள்.
ஆனால் ஊடகத்தில் அமைச்சர்கள், மக்களுக்கு உணவு, தண்ணீர் என தேவையான பொருட்களைக் கொடுத்தோம். மக்களை நேரில் சென்று சந்தித்தோம் என்று பொய் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
போர்க்கால அடிப்படையில் துரிதமாக உணவை மக்களுக்கு கொடுத்து இனியாவது செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான பால் பாக்கெட், பால் பவுடர்களை கொடுக்க வேண்டும். குடிநீர் கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே சென்னையில் இதுபோல பிரச்சனை ஏற்பட்டது. அதை கவனிக்காமல் இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாக தகவல் கொடுக்கவில்லை என்று முதல்வர் சொல்கிறார். ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் சரியாக தான் தகவல் கொடுத்தது.
அரசு துரிதமாக செயல்பட்டிருந்தால் உணவு, குடிநீர் பிரச்சனை வந்திருக்காது. எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
முதல்வர் டெல்லிக்கு நிவாரணம் கேட்க செல்லவில்லை. இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தான் சென்றுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு மத்திய குழு வந்து சென்றுள்ளது. தமிழ்நாடு அரசு நிவாரணமும் கேட்டுள்ளது. அந்த நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். இதில் அரசியல் பார்க்காமல் மக்களின் பிரச்சனைகளைப் பார்த்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
கடும் போராட்டம்: ரூபாய் 8.4 கோடிக்கு தட்டித்தூக்கிய சென்னை… யாருப்பா இந்த 20 வயசு பையன்?
”ஐயோ இவரா?”: மினி ஏலத்தில் பெங்களூர் அணி கொடுத்த ரியாக்சன் வைரல்!