ஓ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் என்று அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று( பிப்ரவரி 3 ) தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பிற்கு பிறகு பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ”திமுகவை எதிர்க்க ஒருங்கிணைந்த அதிமுக- பாஜகவே தேவை. ஈபிஎஸ், ஓ.பி.எஸ் இணைந்தால் தான் திமுகவை எதிர்கொள்ள முடியும்” என்றார்.
சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ”அதிமுக இரு அணிகளாக பிரிந்து இருப்பது கட்சிக்கு நல்லது கிடையாது. இதனை ஆரம்பம் முதலே நான் வலியுறுத்தி வருகிறேன்.
அதிமுகவை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பக்கத்தில் நெருங்கிவிட்டோம். அதிமுகவில் அனைவரும் இணைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக ஒன்றிணைவது அவசியமாகும்” என பேசினார்.
மேலும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம், “நடப்பதெல்லாம் நன்மைக்கே. எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறோம்” எனக்கூறினார்.
அதேநேரம், அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணையவேண்டும் என்றுகூறிய பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியின் கருத்தை கடுமையாக சாடிய எடப்பாடி தரப்பு “எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு சி.டி.ரவி யார்?,
நீங்கள் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் என்ன வேண்டுமானாலும் கூறலாமா? இதேபோல் கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?,
திமுகவை எதிர்த்து ஒரு தேர்தலில்கூட வெற்றி பெறாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவதா எனவும் மேலும், கர்நாடக பாஜகவில் நாங்கள் தலையிடலாமா என்றும் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன் , வேலுமணி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டுவருவது தற்போதைய சூழலில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கர்நாடக பாஜகவில் நாங்கள் தலையிடலாமா? சி.டி. ரவிக்கு எடப்பாடி தரப்பு கேள்வி!
எடப்பாடியின் கூற்றை நீதிமன்றம் நிராகரித்துள்ளது: மனோஜ் பாண்டியன்