மாயமானும் மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று ஓபிஎஸ்- டிடிவி தினகரன் இணைந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் ஓமலூர் பகுதியில் செய்தியாளர்களை இன்று (மே 11) சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ்-டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர்,
”எங்களை பொறுத்தவரை மாயமானும் மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது. பூஜ்ஜியம் + பூஜ்ஜியம் = பூஜ்ஜியம் என்ற நிலைமை தான் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தை துரோகி என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டார். டிடிவி தினகரனை துரோகி என்று ஓபிஎஸ் சும் கூறினார்.
இரண்டு துரோகிகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணி உருவாக்குவதாக சொல்லி இருக்கிறார்கள். ஆக துரோகி என்று சொன்னாலே அது எப்படி இருக்கும் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.
அதுமட்டுமில்லாமல் தினகரனின் கூடாரம் காலியாகி கொண்டிருக்கிறது. காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த நிலை தான். டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்த நிலையில் பண்ருட்டியார் பேட்டி கொடுத்திருந்தார். பண்ருட்டியார் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்ததில்லை.
அதிமுகவில் அம்மா இருக்கும் போது பிரிந்து சென்றார். தொடர்ந்து பாமகவில் இணைந்து பின்னர் தேமுதிகவில் இணைந்தார். தேமுதிகவில் இருந்தும் பிரிந்து வந்தார்.
இப்படி யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. இவர் எங்கே சென்றாலும் அதோடு அந்த கட்சி முடிந்துவிடும் என்ற நிலை தான் இதுவரை இருந்துள்ளது. அவருக்கென்று எந்த தொண்டர்களும் கிடையாது. அப்படிப்பட்ட ஒருவர் அதிமுகவிற்கு விசுவாசமாக இருப்பது போலவும், அவரால் தான் இவ்வளவு நாள் அதிமுகவே இயங்கி வந்தது போலவும் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாகப் பேட்டி அளிக்கிறார்.
ஒரு கிளைச்செயலாளருக்கு இருக்கும் தகுதி கூட பண்ருட்டியாருக்கு கிடையாது” என்று கூறிய எடப்பாடி பழனிசாமி மேலும்,
“ ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கைகுலுக்கிக் கொண்டு இணைந்த போது பண்ருட்டியார் பேட்டி அளிக்கும் போது வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் ஆகியோரை காணவில்லை.
ஓபிஎஸ் திமுகவிற்கு பி டீமாக செயல்படுகிறார் என்று ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். அது தற்போது நிரூபணமாகி இருக்கிறது. மே 6 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய கிரிக்கெட் மேட்சை பார்க்க சென்ற பன்னீர்செல்வம் போட்டியை மட்டும் பார்த்திருந்தால் பரவாயில்லை. அங்கு கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வந்த ஸ்டாலினின் மருமகன் சபரீசனை பார்த்துள்ளார். இரண்டு பேரும் அருகருகே சோபாவில் அமர்ந்து பேசிய செய்தி வெளியாகி ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்பதை நிரூபித்துள்ளது” என்றார் எடப்பாடி பழனிசாமி.
மோனிஷா
அமைச்சர்களின் துறையை மாற்றியது ஏன்? : முதல்வர் விளக்கம்!
அரசு பேருந்தில் பறை இசைக்கருவி: மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்!