வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
”பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட அறக்கட்டளை நிர்வாகிகளிடம் தங்கக் கவசம் பற்றி பேச்சு நடத்துவதற்காக ஓரிரு நாட்களுக்கு முன்பு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தூதர்களாக தேவர் நினைவிட அறங்காவலர் காந்திமீனாவுடன் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் இரா.விசுவநாதன், செல்லூர் கே.ராஜு , ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர் ஓ.எஸ்.மணியன், ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள் அந்த ஆலோசனையில் தங்கக் கவசம் பற்றி பேசப்பட்டதோடு இவர்களுக்குள் இன்னொரு முக்கிய விஷயம் பற்றி பேசப்பட்டிருக்கிறது” என்ற ஒரு குறிப்பை வாட்ஸ் அப் அனுப்ப,
அவர்கள் பேசிக் கொண்ட அந்த விஷயத்தைப் பற்றி ஃபேஸ்புக் மெசஞ்சர் விரிவான மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி அமமுக சார்பில் திமுக அரசை எதிர்த்து தமிழகம் முழுக்க கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினார் டிடிவி தினகரன்.
சென்னையில் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தினகரன், ‘பாஜகவை பார்த்து அதிமுகவினர் பயப்படவில்லை. திமுகதான் தொடை நடுங்கியாக இருக்கிறது.
பாஜகவை காட்டி மைனாரிட்டிகளை பயமுறுத்த கூடாது. அவர்கள் ஆட்சிக்கு வந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டது. என்ன செய்துவிட்டார்கள் நம்மை? என்று பாஜகவுக்கு ஆதரவான தொனியில் பேசினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘அதிமுக அமமுக இணைப்பு இனி சாத்தியமில்லை.
ஆனால் திமுகவை வீழ்த்துவதற்காக அதிமுகவோடு கூட்டணிக்குத் தயார்’ என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி எடப்பாடியின் தூதுவர்களாக பசும்பொன் சென்ற முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, காமராஜ், விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் தேவர் அறக்கட்டளை நிர்வாகியிடம் பேச்சு நடத்திவிட்டு தங்களுக்குள் ஒரு குட்டி மீட்டிங் போட்டிருக்கிறார்கள்.
அதில் தினகரன், ஓபிஎஸ், சசிகலா பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. இதில் என்ன முக்கியம் என்றால் இந்த தூதுக்குழுவில் இடம்பெற்ற அத்தனை பேரும் முக்குலத்து சமுதாயத்தினர் என்பதால் இயல்பாகவே இந்த டாப்பிக் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
’எடப்பாடி அண்மையில் அமித் ஷாவை சென்று சந்தித்தபோது அதிமுகவில் எல்லாரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்பதுதான் நல்லது. போய் பேசி முடிவெடுங்கள் என்று சொல்லி அனுப்பினார். தினகரனோடும் டெல்லி பாஜக தலைமை தொடர்ந்து தகவல் பரிமாற்றத்தில்தான் இருக்கிறது. அதன் அடிப்படையில் வரும் எம்.பி. தேர்தலில் சிவகங்கை போன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தினகரனும் விரும்புகிறார். இந்த பின்னணியில்தான் பாஜகவுக்கு ஆதரவாகவும் அதிமுகவோடு அணி சேர தயார் என்றும் பேசியிருக்கிறார் தினகரன்.
டெல்லி சென்று வந்ததில் இருந்து ஒரு யோசனையாகவே இருக்கிறார் எடப்பாடி . டெல்லி என்னதான் நெருக்கடி கொடுத்தாலும் மீண்டும் ஓபிஎஸ் உடன் இணைவதில் எடப்பாடிக்கு துளியும் விருப்பமில்லை. பன்னீருக்கு முக்குலத்தோரிடம் கூட செல்வாக்கு இல்லை என்றும் அதேநேரம் டிடிவி தினகரன் நான்கு வருடங்களாக கட்சி நடத்தி வருகிறார். தென் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு காரணமான வாக்குகள் பிளவுக்கு தினகரன் தான் காரணம்.
எனவே தினகரனை அதிமுகவோடு கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்ற டெல்லியின் பேச்சுக்கு தலையாட்ட முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. பன்னீரிடம் முக்குலத்து வாக்கு வங்கி இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது.
சசிகலாவிடம் எதுவும் செல்வாக்கு இல்லை. ஆனால் டிடிவி தினகரன் தன்னை சுமார் 3 சதவித வாக்குகள் வாங்கி நிரூபித்திருக்கிறார். எனவே தினகரனை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம். அதன் மூலம் தான் முக்குலத்தோர் எதிரி என்ற பிரச்சாரமும் பொய்யாகும்.
மேலும் கட்சியில் சேர்த்துக் கொண்டால்தான் பிரச்சினை, கூட்டணியில்தானே சேர்த்துக் கொள்கிறோம், அதனால் கட்சியில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைக்கிறார் எடப்பாடி’ என்று அந்த முக்குலத்து முன்னாள் அமைச்சர்களில் சீனியர் ஒருவர் சொல்லியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த இன்னொரு மாஜி, ‘டிடிவி தினகரன் கில்லாடி. அமித் ஷாவின் உதவியோடு தனக்குள்ள வழக்கு விவகாரங்களை தீர்த்துக் கொள்ள நினைக்கிறார். அதேநேரம் வரும் எம்.பி. தேர்தலில் ஒரு எம்.பி. ஆகிவிடலாம் என்று கணக்கு போடுகிறார். இதைவிட ஒரு பெரிய கணக்கும் தினகரனிடம் இருக்கிறது. அதாவது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் எல்லாருடனும் எளிதில் தொடர்புகொள்ள முடியும். எடப்பாடிக்கு ஏதேனும் ஒரு சிக்கல் வரும்போது அப்படியே அதிமுகவை தனது கைக்குள் கொண்டுவந்து விடுவதுதான் தினகரனின் திட்டம். இதெல்லாம் தெரிந்துதான், ‘பன்னீருடன் கூட சேரலாம்.
ஆனால் தினகரனுடன் சேர வேண்டாம்’ என்று தங்கமணி கடுமையாக எதிர்த்து வருகிறார். எப்படியோ நல்லது நடந்தால் சரி…’ என்று சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு பசும்பொன்னுக்கு சென்ற முக்குலத்து முன்னாள் அமைச்சர்கள் தங்கக் கவசத்தை விட டிடிவி தினகரனை பற்றித்தான் தங்களுக்குள் அதிகம் பேசியிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து சைன் அவுட் ஆனது மெசஞ்சர்.