annamalai

டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தலில் போட்டியிட கட்சிக்குள் எதிர்ப்பு- எடப்பாடியா, பன்னீரா? என்ன செய்வார் அண்ணாமலை?

வைஃபை ஆன் செய்ததும், இன்ஸ்டாவில் அதிமுகவின் இரு அணிகளும் அடுத்தடுத்து பாஜக அலுவலகம் சென்று அண்ணாமலைக்கு சால்வை போடும் படங்கள் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் ஒரு ஸ்மைலியை அனுப்பிவிட்டு மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருடத்தில் முதல் இடைத் தேர்தலாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் தெளிவாக ஏற்கனவே இத்தொகுதியில் வெற்றிபெற்ற காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கிவிட்டது திமுக.

அதுமட்டுமல்ல, வேட்பாளர் யார் என்று தெரியாத நிலையிலும் திருமகன் ஈவெரா படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, ஈரோடு திமுக மாசெவும் அமைச்சருமான முத்துசாமியும், திமுக முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேருவும் சேர்ந்து கை சின்னப் பதாகைகளோடு பிரச்சாரத்திலேயே இறங்கிவிட்டனர்.

ஆனால் அதிமுக கூடாரம் குழம்பிப் போய் கிடக்கிறது. அதிமுகவின் குழப்பத்தால் பாஜகவிலும் குழப்பமே எதிரொலித்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவே போட்டியிடும் என்று எடப்பாடி அணியினரின் சந்திப்புக்குப் பிறகு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

ஏற்கனவே கடந்த பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தமாகாதான் போட்டியிட்டது. அந்த வகையில் அதிமுகவின் விருப்பத்துக்காக விட்டுக் கொடுக்கிறோம் என்று அறிவித்தார் வாசன்.

இதைக் கேட்ட ஓ.பன்னீர் செல்வம் ஜனவரி 21 ஆம் தேதி காலை 8 மணிக்கே பத்திரிகையாளர்களை சந்தித்து, ‘ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம், பாஜக போட்டியிடும் பட்சத்தில் அதற்கு ஆதரவு அளிப்போம்’ என்று அறிவித்தார்.

அந்த பிரஸ் மீட்டிலேயே மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்கப் போவதாக அறிவித்தார் ஓபிஎஸ்.

Edappadi or Panneer erode byepoll bjp Annamalai decision

மாலை 4 மணிக்கு ஓபிஎஸ் கமலாலயம் சென்று அண்ணாமலையை சந்திக்கப் போகும் தகவல் கிடைத்ததும், எடப்பாடி பழனிசாமி தனது தரப்பு நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி. ஜெயக்குமார் உள்ளிட்டோரை 3 மணிக்கே கமலாலயத்துக்கு அனுப்பி வைத்தார்.

அண்ணாமலையை சந்தித்து, ஈரோடு கிழக்கில் தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை வைத்தனர் எடப்பாடி தரப்பினர். மீட்டிங் ஹாலில் சந்திப்பு நடத்திய அண்ணாமலை பிறகு அதிமுக எடப்பாடி அணி நிர்வாகிகளை தனியாகவும் சந்தித்தார்.

இதன் பின் 4 மணிக்கு ஓ.பன்னீர்செல்வமே கமலாலயம் வந்தார். அவருடன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். பன்னீர்செல்வத்துடனும் தனிப்பட்ட ஆலோசனை நடத்தினார் அண்ணாமலை.

அப்போது பன்னீர்செல்வம், ‘நீங்கள் ஈரோடு கிழக்கில் போட்டியிடுவதாக இருந்தால் நாங்கள் நிற்க மாட்டோம்’ என்று சொல்லிவிட்டு அதையே பத்திரிகையாளர்களிடமும் மீண்டும் வலியுறுத்தினார்.

இப்படி அதிமுகவின் இரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு பாஜக அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Edappadi or Panneer erode byepoll bjp Annamalai decision

அதிமுக என்பது பெரிய கட்சி. பாஜக என்பது சிறிய கட்சி. இப்படிப்பட்ட நிலையில் சிறிய கட்சியைத் தேடி பெரிய கட்சியான அதிமுகவின் தலைவர்கள் சென்றிருக்கிறார்கள்.

பாஜகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியால் அவர்கள் போகவில்லை. மாறாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகதான் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்தும் நிலையில் உள்ளது. தேர்தல் ஆணையம் நினைத்தால்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கோ, பன்னீருக்கோ கிடைக்கும்.

அதனால்தான் இரு தரப்பும் பாஜக அலுவலகத்தை நோக்கி படையெடுத்திருக்கிறார்கள். இதில் எடப்பாடி தரப்பினர், ‘நாங்கள் நிற்கிறோம். நீங்கள் ஆதரவு தாருங்கள்’ என்று அண்ணாமலையிடம் சொல்லியிருக்கிறார்கள். பன்னீர் செல்வமோ, ‘பாஜக போட்டியிடுவதாக இருந்தால் இந்த பிரச்சினையே இல்லை. நாங்கள் போட்டியிட மாட்டோம்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதில் அண்ணாமலையின் நிலைப்பாடு என்ன என்பதுதான் முக்கியமான கேள்வி. ஜனவரி 20 ஆம் தேதி கடலூரில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக உயர் மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி பேசிய அண்ணாமலை, ‘எனக்கு ஓபிஎஸ் போன் பண்ணினார். எடப்பாடி தரப்பும் தொடர்பு கொண்டார்கள். நாம் இதில் என்ன நிலைப்பாடு எடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’ என்று முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார்.

ஈரோடுக்கு அருகே உள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் அப்பகுதியின் பொறுப்பாளருமான துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், ‘எனக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை பத்தி நல்லா தெரியும், பாஜகவுக்கு அந்த தொகுதியில 50% பகுதிகள்ல கட்டமைப்பே இல்லை. எனவே நாம் அங்கே போட்டியிட்டால் நல்லா இருக்காது. நம்ம பேருதான் கெட்டுப் போகும்’ என்று சொல்லியிருக்கிறார்.

Edappadi or Panneer erode byepoll bjp Annamalai decision

மூத்த நிர்வாகியான ஹெச்.ராஜாவும் இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட தேவையில்லை என்று கூறினார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘நாம் இப்போது திமுகவுக்கு எதிராக கையை இறுக்க மூடி வைத்திருக்கிறோம். ஒருவேளை ஈரோடு கிழக்கு தொகுதியில் நின்று நாம் தோற்றுவிட்டால் கையை திறந்து காட்டியது போல ஆகிவிடும். மக்களவைத் தேர்தலில் அது நம் செல்வாக்கை குறைத்துவிடும்’. எனவே இடைத்தேர்தலில் நாம் போட்டியிட வேண்டாம்’ என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், ‘இடைத்தேர்தலில் போட்டியிட அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்’ என்று பேசினார். இப்படி 90% நிர்வாகிகள் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டாம் என்றுதான் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகனும், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனும்தான் இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள்.

கேசவ விநாயகன் பேசும்போது, ‘அதிமுகவின் வீழ்ச்சியில்தான் பாஜகவின் எழுச்சி இருக்கிறது. எனவே இந்த இடைத் தேர்தலில் அதிமுக பிளவுபட்டு நிற்கும் நிலையில், நாம் அங்கே போட்டியிட வேண்டும்’ என்று பேசினார்.

கராத்தே தியாகராஜன் பேசும்போது, ‘இப்போது தமிழ்நாட்டில் பாஜகதான் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையை நாம் ஏற்படுத்திவருகிறோம். ஸ்டாலினா அண்ணாமலையா என்றுதான் பேச்சிருக்கிறது. இந்த நிலையில் நாம் போட்டியிடுவதை தவிர்க்கக் கூடாது. 94 ஆம் ஆண்டு மயிலாப்பூர், பெருந்துறை சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக,அதிமுகவுக்கு எதிராக மயிலாப்பூரில் காங்கிரஸும், பெருந்துறையில் அப்போதுதான் தோன்றிய மதிமுகவும் போட்டியிட்டன. அந்த வகையில் நாம் ஈரோடு இடைத்தேர்தலில் நிற்க வேண்டும்’ என்று பேசினார்.

இப்படி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று 90% பேர் சொல்லிய நிலையில்…. போட்டியிட வேண்டும் என்று பத்து சத நிர்வாகிகளே பாஜகவின் உயர் மட்ட குழு கூட்டத்தில் பேசியிருக்கிறார்கள்.

இந்த கூட்டம் நடந்த அடுத்த நாளில்தான் எடப்பாடி தரப்பினரும், பன்னீர் தரப்பினரும் பாஜக அலுவலகத்துக்குச் சென்று அண்ணாமலையை சந்தித்திருக்கிறார்கள். பாஜக தனித்துப் போட்டியிடுவதற்கு நிர்வாகிகளின் எதிர்ப்பையும், அதிமுகவில் பெரும்பான்மை எடப்பாடியிடம்தான் இருக்கிறது என்பதையும், பன்னீருக்கு பின்னால் திமுக இருக்கிறது என்று கிடைக்கும் தகவல்களையும் டெல்லிக்கு ரிப்போர்ட் ஆக அனுப்பி வைத்திருக்கிறார் அண்ணாமலை.

டெல்லி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்தே அண்ணாமலையின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்கிறார்கள் கமலாலயத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஓபிஎஸுக்கு ஆதரவா? ஈபிஎஸுக்கு ஆதரவா?: ஜான் பாண்டியன்

இதுவரை கதை… இப்போது பட்டமா? ‘சூப்பர் ஸ்டார்’ குறித்து பயில்வான் ரங்கநாதன்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts