விமான நிலையத்தில் இபிஎஸ் – நயினார் நாகேந்திரன் சந்திப்பு… நடந்தது என்ன?

Published On:

| By vanangamudi

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரனும் நேற்று (மார்ச் 10) கோவை விமான நிலையத்தில் சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதத்திற்குள்ளாகியுள்ளது. Edappadi Nainar Nagendran meeting

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனாவுக்கு கடந்த மார்ச் 3-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அவரது மகன் மிதுனும் மனைவியும் கலந்து கொண்டனர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் அண்ணாமலையை சிரித்த முகத்துடன் வரவேற்று அவருடன் நெருக்கம் காட்டியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

அதேவேளையில், எடப்பாடி பழனிசாமி இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளாதது எடப்பாடி – வேலுமணி இடையேயான நெருடலை உறுதி செய்திருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்தன.

இந்தநிலையில், நேற்று கொடிசியா மைதானத்தில் எஸ்.பி.வேலுமணி மகன் திருமண ரிசப்ஷனில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை போலவே தடபுடலான ஏற்பாடுகளை செய்திருந்தார் எஸ்.பி.வேலுமணி.

இந்த ரிசப்ஷனில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி கோவை ஏர்போர்ட் சென்றார். விமான நிலையத்தில் காத்திருந்த சிபி ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரனை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது நயினார் நாகேந்திரனிடம் அரை மணி நேரம் அரசியல் ரீதியாக எடப்பாடி பேசியதாக சொல்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

“எப்போது பாஜக தலைவராவீர்கள்?” என்று எடப்பாடி பழனிசாமி நயினாரிடம் கேட்க, ” உங்க கையில தாண்ணே எல்லாம் இருக்கு. நீங்க ஆசி வச்சா சீக்கிரமாவே தலைவராகியிரலாம்” என்று சொல்லியிருக்கிறார்.

“திமுகவுக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமா இருக்கு. அனைவரும் இணைந்து தேர்தலை சந்தித்தால் நல்லா இருக்கும்” என்று நயினார் நாகேந்திரன் விருப்பம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியும் அவரது விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள்.

மார்ச் 9-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை செய்த எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி தொடர்பாக மீடியாக்களில் பேச வேண்டாம்” என்று நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டிருந்தார். இந்தநிலையில், எடப்பாடி, நயினார் நாகேந்திரனுடன் கூட்டணி குறித்து பேசியிருப்பது மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி அமையுமா என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. Edappadi Nainar Nagendran meeting

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share