கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 20) இரங்கல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 110க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, தமிழக அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.
ஆனால், இச்சூழலில், இந்த திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது.
மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன, இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்!” என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் : சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்!
’நெட்’ முறைகேடு அம்பலம் : தேர்வு ரத்து!