எடப்பாடி லீக்ஸ்! – மினி தொடர் – 8
அமைச்சர் காரில் திமுக எம்.எல்.ஏ
ஆரா
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாக்கைத் துருத்திக் காட்டிய பிறகு 2012-ல் இருந்து 16 வரையிலான சட்டமன்றத்தில் இருந்த தேமுதிக உறுப்பினர்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை தொடக் கூட முடியவில்லை.
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி என்பது தொகுதிக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்காக, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் வருடத்துக்கு இரண்டரை கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.
ராஜீவ் காந்தி சீனியர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு மிகவும் இளம் வயதில் திடீரென்று பிரதமர் ஆகிவிட்ட நிலையில் எம்.பி.க்களை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்வதற்காக செய்த ஏற்பாடுதான் இந்த பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி. அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இது கொண்டுவரப்பட்டது.
ஒரு கோடியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி இரண்டு கோடி ரூபாய் ஆகி, இப்போது இரண்டரை கோடி ருபாய் ஆக உயர்ந்திருக்கிறது. ஓர் சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதியில் பள்ளிக் கட்டிடங்கள், தண்ணீர் பம்ப்புகள், குடிநீர் மேல் நிலை தொட்டிகள், கழிவறைகள், நிழற்குடைகள், ரேஷன் கடைகளுக்கான கட்டிடங்கள் என்று இந்த நிதியில் இருந்து தொகுதியின் அடிப்படைக் கட்டமைப்பை பூர்த்தி செய்ய வேண்டிய பணிகளுக்காக பணம் ஒதுக்குவார்.
சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் நிதி என்ற பெயர் இருந்தாலும் இதெல்லாம் இருப்பது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்தான்.
சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதியில் இன்னின்ன பணிகள் நடக்க வேண்டும் என்று தனது தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுவாக வாங்க வேண்டும். அந்த மனுவோடு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த பணியை நிறைவேற்றுமாறு பரிந்துரை செய்து அந்த கடிதத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகம், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இதன் பிறகு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து எஸ்டிமேஷன் தயார் செய்து அனுப்புவார்கள். அது அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு பின் டெண்டர் வைக்கப்பட்டு பணி செய்து முடிக்கப்படும். இதுதான் காகித நடைமுறை.
ஆனால் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் பரிந்துரை செய்த வேலைகள் உடனடியாக ஒப்புதல் கொடுக்கப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படும்.
ஆனால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு எப்போதுமே இது எட்டாக் கனிதான். அதுதான் 2011-16 தேமுதிக உறுப்பினர்களே இதற்கு உதாரணம். விஜயகாந்த் சட்டமன்றத்தில் விஸ்வரூபம் காட்டியபிறகு அரசு அலுவலகங்களில் ஆளுங்கட்சியின் விஸ்வரூபம் வெளிப்பட ஆரம்பித்தது. தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏன் விஜயகாந்த் கூட தன் தொகுதியில் ஏதாவது பணிகள் செய்ய வேண்டும் என்றால் போராட வேண்டியிருந்தது.
அவர்கள் பரிந்துரை செய்த தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நிர்வாக அனுமதி அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. ஒப்புதல் கொடுத்தாலும் பில்லில் அது அதிகமாக இருக்கிறது, இதற்கு ஏன் இவ்வளவு செலவானது என்று கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள் அதிகாரிகள். கடைசியில் பணிகள் முடிந்து பல மாதங்கள் கழித்துதான் கான்ட்ராக்டருக்கு பணமே கொடுக்கப்படும்.
இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் அப்போது தேமுதிக உறுப்பினர்களுக்கு சொல்லப்பட்ட ஒரே செய்தி. ’தொகுதி நலனுக்கு என்று சொல்லி அம்மாவை வந்து பாருங்கள்’ என்பதுதான். வட்டிக்கு கடன் வாங்கி தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினர்களான தேமுதிகவின் உறுப்பினர்கள் சிலர் ஜெயலலிதாவை அன்று சந்தித்த பின்னணி இதுதான்.
இதுதான் தேமுதிக என்ற எதிர்க்கட்சியை ஜெயலலிதா நடத்திய விதம்!
’எப்போதும் நான் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வருகிறேன்’ என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இப்போதைய எதிர்க்கட்சியான திமுகவை நடத்தும் விதம் என்பது ஜெயலலிதாவின் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறானது என்பதே உண்மை.
அன்று தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருந்த நெருக்கடி இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை என்பதே உண்மை. எல்லா திமுக உறுப்பினர்களுக்கும் என்று பொதுவாக சொல்லிவிட முடியாதுதான். ஆனால், கணிசமான திமுக உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கனிவான எல்லைக்குள்தான் இருக்கிறார்கள்.
ஒரு சம்பவத்தை சொல்கிறேன்… இவர்கள் யாராக இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டிருங்கள்.
அண்மையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த நேரம்… கடற்கரை சாலையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் கார்கள் கோட்டையை நோக்கி காலை நேரத்தில் விரைந்துகொண்டிருக்கின்றன.
சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு முன் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினரின் கார் பழுதாகி நிற்கிறது. கடற்கரைக் காற்று அவரது தலையைக் கலைத்துப் போட்டிருக்க தாடியுடன் நிற்கிறார், அந்த சென்னை திமுக சட்டமன்ற உறுப்பினர்.
அப்போது அந்த வழியே ஒரு கொங்கு நாட்டு அமைச்சர் வந்துகொண்டிருக்கிறார். ஜன்னல் வழியாக ஓரத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் நிற்பதைப் பார்த்ததும் அவரது கார் அருகே தன் காரை ஓரங்கட்டுகிறார்.
செல்லமான குட்டிப் பெயரை அழைத்துக் கூப்பிடுகிறார். அந்த திமுக உறுப்பினர் அந்த அமைச்சரின் காரில் ஏறிக் கொள்ள கார் ஜெயலதாவின் சமாதியைத் தாண்டி சட்டமன்றம் நோக்கிப் பறக்கிறது.
அன்றுதான் சட்டமன்றத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் அனல் பறந்தது வாதம்!
இந்த சம்பவம் ஒரு சாம்பிள்தான்…
(லீக் ஆகும்)