எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 7
ஜெவும் தேமுதிகவும்… எடப்பாடியும் திமுகவும்!
ஆரா
எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தை மக்களும் எதிர்க்கட்சியினரும் பார்க்கும் முறை வேறு. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் பார்க்கும் பார்வையே வேறு.
தங்க முட்டையிடும் வாத்தை யாராவது அறுத்து வயிற்றில் இருந்து முட்டையை எடுக்க ஆசைப்படுவார்களா? அதுபோல், இந்த அரசாங்கம் என்பது கணிசமான சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தங்க முட்டையிடும் வாத்து. உயிரோடு விட்டால் முட்டை போட்டுக்கொண்டே இருக்கும். ஒரேயடியாக அறுத்துப் பார்த்தால் ஒருவேளை குழம்புக்குக் கூட தேறாது.
இந்த நிலையில்தான்… மீண்டும் தர்மயுத்தம் நடந்தால் ஓ.பன்னீருடன், மூத்த சட்டமன்ற உறுப்பினர் செம்மலைக் கூடப் போக மாட்டார் என்கிறார்கள் சேலத்தில். இன்று முதல்வர் சேலம் வருகிறார் என்றால் செம்மலை அவரது வீட்டுக்குப் போய்விடுகிறார். இருவரும் மனம்விட்டுப் பேசிக் கொள்கிறார்கள்.
தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் செம்மலையும் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார் முதல்வர். செம்மலையின் கையைப் பிடித்துக் கொண்டு வாயெல்லாம் பல்லாகச் சிரிக்கிறார் எடப்பாடி. இது காட்சி என்றால், இந்தக் காட்சியின் ‘தீம்’ என்னவென்று கட்சியினர் அனைவருக்கும் புரிந்துவிடுகிறது.
இன்னமும் ஓ.பன்னீருடன் உறுதியான ஆதரவு நிலையில் இருப்பது மனோரஞ்சிதம் உட்பட இரு எம்.எல்.ஏக்கள்தான் என்றும் ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் அலையடிக்கிறது. ஆனால், அதுவும் இன்னும் எத்தனை நாளைக்கு என்றும் தெரியவில்லை.
இந்த பிட்ச் ரிப்போர்ட் பன்னீருக்குத் தெரியாதா?
ஏன் தெரியாமல்? அவரும் முதல்வராக இருந்தவர்தானே… அவரும் களப் பணி செய்தவர் தானே? ஒவ்வொரு மாவட்டத்திலும் கரன்சியில் ஊறிய அதிகாரம் என்னென்ன பணிகளை செய்து வருகிறது என்பதை அவரும் உணர்ந்திருக்கிறார். இப்போது பன்னீரின் திட்டம், வரும் எம்.பி தேர்தலில் தன் மகனுக்கு ஒரு சீட் அதன் பிறகு தேசிய அரசியலில் ஏற்படும் மாற்றத்தைப் பயன்படுத்தி சில நகர்வுகளை நடத்துவது என்பதுதான்.
தங்க முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்க்க பன்னீரும் இப்போது ஆசைப்படவில்லை!
பன்னீர் தரப்பினரைப் பற்றிப் பார்த்தாகிவிட்டது. அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனம் திமுகவினர் மீதுதான்.
தமிழகச் சட்டமன்றம் கூடும்போது அங்கே இருக்கும் செய்தியாளர்கள் பார்த்திருக்கலாம். பல்வேறு கட்சிகளைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரையும், துறை அமைச்சர்களையும் பார்த்து பல்வேறு கோரிக்கைகளை வைப்பார்கள்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, சட்டமன்ற காலங்களில் பல திமுக உறுப்பினர்கள் அவருக்கு வணக்கம் தெரிவிப்பார்கள். அவரும் பதில் வணக்கம் தெரிவிப்பார். மன்றத்தில் முறையிட்டு இன்னும் தீர்வு வராத மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இருந்தால் கட்சி பேதமின்றி முதல்வரிடம் மனு கொடுப்பார்கள். அதைப் பார்த்து முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.
கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதியும் ஜெயலலிதாவும் மன்றத்தில் கடுமையாக மோதிக்கொள்வார்கள். விவாதித்துக்கொள்வார்கள். ஆனால், சட்டமன்ற வளாகத்தில் பாலபாரதி முதல்வர் ஜெயலலிதாவிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைக் கொடுப்பார்.
தன் தொகுதி மக்களின் முதியோர் பென்ஷன், விதவைகள் பென்ஷன், சாலைகள், ரேஷன் கடைகள், கழிப்பறைகள் என்று முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினைகள் அடங்கிய மனுக்களையே ஜெயலலிதாவிடம் பாலபாரதி கொடுப்பார். ‘மேடம், இந்த மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க’என்று வார்த்தைக் குறிப்பையும் மனுக்களோடு சொல்லுவார். சிரித்துக்கொண்டே பெற்றுக் கொள்ளும் முதல்வர் அதில் பலவற்றை தீர்த்து வைத்திருக்கிறார்.
– இது ஒரு ரகம்.
இன்னும் சில எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். என் பெண்ணுக்கு மருத்துவ சீட் வேண்டும், என் மகனுக்கு இந்த பிரச்சினை இதெல்லாம் சரிசெய்து கொடுங்கள் என்று கேட்பவர்களும் உண்டு. கட்சி பேதமின்றி எல்லா ஆட்சிகளிலும் இந்தக் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதுண்டு. ஏனென்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற உணர்வுக்கான விளைவு அது.
ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் ராணுவக் கட்டுப்பாடு இருந்தது. அது சட்டமன்றத்தில்தான் பரவலாகத் தெரியும்.
ஆனால், இந்த எடப்பாடி ஆட்சியில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் சபையில் நிலவும் கெமிஸ்ட்ரியை பார்த்தால் பழைய வரைமுறைகள் உடைபட்டுப் போயிருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ‘திமுகவின் எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர்களின் அறைகளுக்குச் செல்லக் கூடாது’ என்று உத்தரவு போட்டிருக்கிறார். அமைச்சர்களின் அறைகளுக்குத் திமுகவினர் செல்கிறார்கள் என்றால் அது வேறு மாதிரிப் போய்விடும் என்பதை அவர் உணர்ந்ததால்தான் இப்படி ஓர் உத்தரவை ஆரம்பத்திலேயே பிறப்பித்துவிட்டார்
அமைச்சர்களின் அறைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல், சட்டமன்ற வளாகத்திலேயே திமுகவினரும் அமைச்சர்களும் பார்த்துப் பேசிக் கொள்கிற காட்சியும் இப்போது சாதாரணமாகி இருக்கிறது.
இந்த நேரத்தில் இன்னொரு காட்சியை நினைவுபடுத்த வேண்டியது கட்டாயம்!
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்துப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். ஆனால், இந்த உறவு வெகு சீக்கிரம் நீடிக்கவில்லை.
2012 பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தேமுதிகவுக்கும் அதிமுகவுக்குமான உறவு முறிந்துவிட்டது. பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு பற்றி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் அதிமுக உறுப்பினர்களுக்கும் ஏற்பட்ட மோதல் தமிழகச் சட்டமன்றத்தில் புதிய வரலாறு படைத்தது. நாக்கைத் துருத்தி தனது பாணியில் விஜயகாந்த் ஆவேசமாக, விஜயகாந்த் உட்பட 29 உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர்.
அது முதற்கொண்டு அந்த ஆட்சி முடிந்த 2016 வரையிலும் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட கதி அரசியலில் எல்லாருக்கும் தெரியும். தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அவர்களால் ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தி வைக்க முடியவில்லை.
ஜெயலலிதா தேமுதிகவை டீல் பண்ணியது அப்படி…
எடப்பாடி பழனிசாமி திமுகவை டீல் பண்ணுவது எப்படி?
(லீக் ஆகும்)