எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 6
பன்னீரின் நிழல் கூட…
ஆரா
“எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தால் நீங்க எம்.எல்.ஏ ஆக இருக்கலாம். இல்லே, எடப்பாடி முதல்வராக இருக்க முடியாது, பதவியை விட்டுப் போகணும்னு நினைச்சீங்கன்னா… எனக்கு ஒண்ணும் பிரச்சினையில்லை. நான் போய் ஏற்காடு பக்கத்தில விவசாயம் பாக்க ஆரம்பிச்சுடுவேன். ஆனால், நீங்க யாரும் எம்.எல்.ஏ ஆக இருக்க முடியாது. அதை ஞாபகத்துல வெச்சுக்கங்க” என்பதுதான் தன் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் எடப்பாடி விடுத்த செய்தி. இது ஆறு மாதங்களுக்கு முன்னே நடந்தது.
அணிகள் இணைப்புக்குப் பின்னர், ஓ.பன்னீரின் ஆதரவாளர்கள் தங்களுக்கு முக்கிய அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்றும் கட்சிப் பதவிகள் கிடைக்கும் என்றும் காத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களை இலவு காத்த கிளியாகவே இருக்க வைத்திருக்கிறார் எடப்பாடி.
இதிலும் ஓர் உளவியல் இருக்கிறது.
நினைத்தபோதெல்லாம் டெல்லி சென்று மோடியைச் சந்தித்தாலும், துணை முதல்வர் என்ற பதவி வழங்கப்பட்டாலும் பன்னீரின் வீச்சு என்பது எடப்பாடியை விடக் குறைவுதான் என்பதை அவரது அணியினர் உணர வேண்டும் என்பதால்தான் அவர்களைக் காக்க வைத்தார் எடப்பாடி. இப்போது பன்னீரின் மீது அவரது அணியினரின் வைத்த நம்பிக்கையைப் பாதியாக, ஏன் கால்வாசியாகக் கூட குறைத்துவிட்டார் எடப்பாடி.
அணிகள் இணைந்த பின்னரும் அதிமுகவில் பன்னீர் அணி என்பது தனித்து இயங்குவது தெளிவாகத் தெரிந்தது. ஒருவேளை பன்னீரின் சிபாரிசின் பேரில் பதவிகள் கிடைக்கும் என்று பல பேர் ஐக்கிய அதிமுகவிலும் தங்களது பன்னீர் பாசத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தனர். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அது குறைந்து போனது.
“என்னை முதல்வரா ஆக்கியிருந்தால் உங்களுக்கு அமைச்சர் பதவியும், மத்த கட்சிப் பதவியும் வாங்கிக் கொடுத்திருப்பேன். ஆனால், துணை முதல்வர் தானே. இவ்வளவுதான் முடியும்” என்று தனது ஆதரவாளர்களிடம் பன்னீரே மனம்விட்டுப் பேசும் நிலைக்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில்தான் பன்னீரின் ஆதரவாளர்களையும், ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களையும் பக்குவமாக தன் பக்கம் கொண்டுவந்தார் எடப்பாடி.
அதைத் தனது சொந்த மாவட்டத்திலிருந்தே ஆரம்பித்தார் எடப்பாடி.
மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ ஆக இருக்கும் செம்மலை சீனியர். ஏற்கெனவே ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வளர்ச்சிக்கு சீனியர் என்ற முறையில் ஸ்பீடு பிரேக்காக இருந்த செம்மலை, சேலம் மாவட்ட அதிமுகவின் முக்கிய அடையாளங்களில் ஒருவர்.
பன்னீர் பதவி விலகி எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் போகிறார் என்ற நிலை ஏற்பட்டபோது எடப்பாடியின் கொங்குமண்டல எதிரிகளில் முக்கியமானவரான செம்மலையை அழைத்து ஆலோசித்தார் பன்னீர். ஏற்கனவே எடப்பாடியோடு தனக்கு இருக்கும் மாவட்ட அரசியல் முரண்பாடுகளால்தான் பன்னீரை ஆதரித்தார் செம்மலை. அதுமட்டுமல்ல, கிரீன்வேஸ் சாலை பன்னீர் வீட்டு வாசலில் நின்றுகொண்டு, ‘எடப்பாடிக்கு முதலமைச்சர் ஆவதற்கான தகுதியே இல்லை’ என்று பேட்டி கொடுத்தவர் செம்மலை. இப்படிப்பட்ட செம்மலைக்கு, அணிகள் இணைப்புக்குப் பின் எப்படி எடப்பாடி தன் அமைச்சரவையில் இடம் கொடுப்பார்?
தன் சேலம் மாவட்டத்தில் இருந்து தன்னை மிஞ்சி கட்சியில் யாரும் எழுந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இப்போதைய நிலையில், தனது நீண்ட நாள் எதிரியான செம்மலையுடனே நெருங்க ஆரம்பித்துவிட்டார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு மேலிடத்தில் இருந்து வாய்மொழி உத்தரவுகள் போயிருக்கின்றன, ‘செம்மலை என்ன கேட்டாலும் செய்து கொடுக்க வேண்டும்’என்று. அணிகள் இணைப்புக்குப் பின் சில காலம் அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்து சோர்ந்துபோன செம்மலை இப்போது மேட்டூர் தொகுதியின் அரசு நிகழ்ச்சிகளில் அடிக்கடி தலைகாட்டுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் நிகழ்ச்சிகளில் தென்படுகிறார்.
செம்மலைக்கு மட்டுமல்ல… பன்னீர் அணியில் இருந்துகொண்டு எடப்பாடிக்கு எதிராக நீட்டி முழங்கிய பலருக்கும் இதுதான் நிலையாக இருக்கிறது. இது எடப்பாடியின் முக்கியமான ஒரு செயல் திட்டம்.
இன்னொன்று கூட்டுறவுத் தேர்தல்…
உள்ளாட்சித் தேர்தலில் பன்னீர் தரப்பினருக்குப் பங்கு கொடுத்து அவர்களையும் தனது ஆதரவாளர்களாக்கிக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்டிருந்தார் எடப்பாடி. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் தினகரன் குக்கரோடு காத்துக் கொண்டிருப்பதால், மக்களை சந்திக்கத் தேவையில்லாத கூட்டுறவு சங்கத் தேர்தலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி.
தமிழகம் முழுக்க இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சொசைட்டிகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடந்து வருகிறது. இதைத் தேர்தல் என்று சொல்வதைவிட, ‘போட்டியின்றி தேர்வு செய்யும் முறை’ என்று சொல்லிவிடலாம்.
அதிமுகவின் அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும்… அவர்கள் பன்னீர் ஆதரவாளர்களாக இருந்தபோதும் சரி, பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் போட்டியின்றி ஜெயிக்க வைக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் அதிமுகவின் அனைத்து நிர்வாகிகள் மத்தியிலும் பணம் புழங்குவதற்கு அடிகோலியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பணமதிப்பழிப்பு நடவடிக்கையின்போது பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு அதிமுகவினருக்குப் பக்கபலமாக இருந்தது கூட்டுறவு வங்கிகள்தானே… கூட்டுறவு தேர்தலில் ஜெயிக்க வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பன்னீர் ஆதரவாளரிடமும், ‘இது எடப்பாடி கொடுத்த பதவி’ என்ற உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆக மெல்ல மெல்ல பன்னீர் அணியின் பெரும்பகுதியை தனது ஆதரவாளர்களாக மாற்றுவதே எடப்பாடியின் குறிக்கோள். அது கூட்டுறவு தேர்தல் மூலம் பெரும்பகுதி நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இன்றைய நிலையில் ஓ.பன்னீர் மீண்டும் தர்மயுத்தம் தொடங்கினால் என்ன ஆகும் என்று அந்த அணியென்று அறியப்படும் ஒரு முக்கியஸ்தரிடம் கேட்டோம்.
‘அவர் துணை முதல்வராக சம்மதிச்சப்பவே பாதி தோத்தாச்சு. இப்ப முழுசா தோத்துக்கிட்டிருக்கோம். இனி ஒருமுறை தர்மயுத்தம் ஆரம்பிச்சார்னா… பன்னீர் நிழல் கூட அவர் பின்னாடி போகலாமானு எடப்பாடிக்கிட்ட கேட்டுக்கும் சார்’என்றார்.
பன்னீர் டீமை பக்குவப்படுத்தியதில் அடைந்த வெற்றியை அடுத்து எடப்பாடியின் கவனமெல்லாம் திமுக மீது. அதுவும் முதல் முறை வெற்றி அடைந்த திமுக எம்.எல்.ஏக்கள் மீது….
(லீக் ஆகும்)