எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர்- 5
அஞ்சு மணி நேரத்துல ஊர் போயிடுவேன்
ஆரா
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன சில மாதங்களில் கோட்டையில் பச்சைத் துண்டுகளோடு பல்வேறு நபர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். விவசாயிகள் சங்க பிரமுகர்கள் என்றும், கொங்கு இயக்கப் பிரமுகர்கள் என்றும் பலர் பேர் முதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
அவர்களில் அனேகம் பேர் சொன்ன வாழ்த்தின் சாராம்சம் என்னவென்றால், ’‘எப்படியோ, ஒரு சந்தர்ப்பத்துல நம்ம சமுதாயத்துக்கு தமிழ்நாட்டின் முதல்வர் ஆகுற வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதை நாம விட்றக் கூடாது. கொங்கு மக்களுக்கு மட்டுமில்ல, தமிழ்நாட்டு மக்களுக்கும் நீங்க தலைவர்ங்குகிறதை நிரூபிக்கணும். அதனால எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க. நம்ம லாபி எப்பவுமே உங்களுக்காக இருக்கும்’’ என்று வெளிப்படையாக தெம்பேற்றும் வார்த்தைகளை சொல்லிவிட்டுப் போனார்கள்.
அவர்கள் சொல்வதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம் தனக்கு ஓர் முத்திரை விழுவதை அவர் விரும்பவில்லை. தினகரனும் பிரிந்து, அணிகளும் இணையாமல் இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு யுகமாகவே கழியும். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் தனித்தனியாக சந்திப்பார், அவரின் தேவை என்ன என்று கேட்பார். இந்த ஆட்சி இருக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லுவார்.
எடப்பாடி பழனிசாமி அப்போது எம்.எல்.ஏக்களிடம் சொன்ன வார்த்தைகளை இன்றும் பல எம்.எல்.ஏ.க்கள் மறக்கவில்லை.
‘இங்க பாருங்க… எனக்கு ஒண்ணும் கவலையில்லை. கோட்டையிலை தமிழக முதல்வர்ங்குற பெயர் பட்டியல்ல எடப்பாடி பழனிசாமின்னு பெயர் எழுதியாச்சு. அதை வரலாற்றுலேர்ந்து இனிமே யாரும் நீக்க முடியாது. இப்ப கூட ஆட்சி கவுந்துச்சுன்னா எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. கீழ இறங்கிப் போய் வண்டிய எடுத்தேன்னா அஞ்சு மணி நேரத்துல என் வீடு போய் சேர்ந்துடுவேன். நிம்மதியா தூங்கிடுவேன்.
ஆனால் என்னெனனவோ எதிர்பார்த்து எம்.எல்.ஏ. ஆகியிருக்கீங்க. ஒரு வருசம் கூட ஆகலை, நீங்களும் என்னை மாதிரியே போய் படுத்து நிம்மதியா தூங்கலாம்னா ஆட்சிய கலைச்சுட்டு போய்கிட்டே இருங்க. இல்லைன்னா எனக்கு ஆதரவு கொடுங்க’’ என்பதுதான் எடப்பாடியின் எதார்த்த வார்த்தைகள்.
இதை இந்த இடத்தில் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு இப்போது அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன, துணை முதல்வர் என்ற பெயரில் அவர் ஓர் துறை அமைச்சர் என்ற அளவுக்குத்தான் நடத்தப்படுகிறார், சட்டமன்றத்திலும், கோட்டையிலும், ஏன் தமிழக அரசின் செய்தி வெளியீட்டுத் துறையிலும் கூட எடப்பாடி பழனிசாமியே வெளிச்சமான பிம்பமாக சித்திரிக்கப்படுகிறார்.
இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?
எடப்பாடி தன் ஆட்சியைக் காப்பாற்ற, தன் முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ள போராடி வந்த தருணத்தில்தான்… வெறும் எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருந்துகொண்டு அடிக்கடி டெல்லி சென்று பாஜக புள்ளிகளை சந்தித்தார் ஓ.பன்னீர். அப்போது அவரது இலக்கு எதுவென்றால், ‘தினகரனை கட்சியில் இருந்து ஒதுங்க வேண்டும் என்றுதான் விரும்பினோம். அது நடந்துவிட்டது. என்வே இப்போது மீண்டும் இணையத் தயார். ஆனால் மீண்டும் முதல்வர் பதவி பன்னீருக்கே வேண்டும்’ என்பதுதான் அன்று பன்னீர் தரப்பினரின் பலமான வேண்டுகோள்.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்டுத்தான் பல்வேறு பச்சை துண்டுகளும் முதல்வரைச் சந்தித்தார்கள். கொங்கு பெருமையை விட்டுவிடக் கூடாது என்று குறிப்பிட்டுச் சொன்னார்கள். இது ஒருபக்கம் என்றால் அணிகள் இணைப்பை நடத்துங்கள், பன்னீரை முதல்வர் ஆக்குங்கள் என்று டெல்லித் தரப்பின் அழுத்தமும் அதிகரித்தது.
அணிகளை இணைத்தால் முதல்வர் பதவியை பன்னீருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும், அப்படி விட்டுக் கொடுத்தால் தனக்கான இமெஜை குறைத்துவிடும் என்றும் கணக்குப் போட்டார் எடப்பாடி பழனிசாமி. ஏற்கனவே நாம் பார்த்தமாதிரி, கேட்டதும் கொடுப்பவர் அல்லவே பழனிசாமி.
ஆனால் டெல்லியின் ஓயாத வற்புறுத்தலுக்குப் பிறகுதான் அணிகளை இணைப்போம் ஆனால் முதல்வர் பதவியில் மாற்றம் இல்லை. வேண்டுமென்றால் ஏற்கனவெ முதல்வராக பணியாற்றிய பன்னீருக்கு துணை முதல்வர் பதவி தரலாம் என்ற திட்டத்தை முன் வைத்தார் பழனிசாமி.
பன்னீருடன் தர்ம யுத்தத்துக்காக சென்ற பலர் தர்மசங்கடமான யுத்தத்தை மேற்கொண்டிருந்த நிலையில், வேறு வழியின்றி இந்த டீலுக்கு ஒ.கே. சொன்னார்கள். பன்னீருக்கே துணை முதல்வர் என்றால் தங்கள் கூடாரத்தில் பல்வேறு தரப்பினருக்கும் பல்வேறு பதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஸ்கெட்ச் போட்டார்கள். இதையெல்லாம் எடப்பாடி செய்ய வேண்டும் என்பதற்குக் கொடுக்கப்பட்ட மறைமுக அழுத்தம் தான் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் இருவரது கையையும் சேர்த்துவைத்து போட்டோவுக்கு கொடுத்த போஸ். துணை முதல்வர் பதவியேற்ற சில நிமிடங்களிலேயே பன்னீருக்கு மோடியிடம் இருந்து வந்த வாழ்த்து.
இந்த பின்னணியில்தான், மீண்டும் முதல்வர் பதவி கேட்ட பன்னீருக்கு, துணை முதல்வர் பதவி கொடுத்தாகிவிட்டது. ஆனால் துணை முதல்வர் பதவி என்ற பதவியை அல்ல, வார்த்தையைதான் எடப்பாடி கொடுத்திருக்கிறார் என்பது பன்னீர் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது. அணிகள் இணைப்புக்குப் பின் பன்னீர் தரப்பு எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து கவனிக்க ஆரம்பித்தார் எடப்பாடி.
அன்று மற்றவர்களுக்கு சொன்ன அதே வார்த்தையைச் சொன்னார். ‘எனக்கு ஒண்ணுமில்லை… எடப்பாடிக்கு அஞ்சு மணி நேரம் தான். உங்களப் பாத்துக்கங்க’ என்பதுதான் எடப்பாடியின் எதார்த்த வார்த்தைகள்.
இந்த வார்த்தைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது.
(லீக் ஆகும்)