எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 4
பன்னீருக்கு வைத்த செக்!
ஆரா
எடப்பாடி பழனிசாமி தனக்குச் சந்தர்ப்பவசத்தால் கிடைத்த முதல்வர் பதவியைச் சாமர்த்தியமாக தக்கவைத்துக் கொண்டுள்ளார். அந்த நாற்காலியில் ஏறிய சூழல், காரணம் எல்லாம் அவருக்கு நினைவில் இருந்தாலும்…. அதையெல்லாம்விட முக்கிய நினைவாக இப்போது முதல்வர் நாற்காலியில் இருக்கிறோம், அது தொடர வேண்டும் என்பதே அவரது லட்சியமாக உள்ளது.
இதை உறுதிப்படுத்திக் காட்டும் வெளிப்பாடாகத்தான்… சட்டமன்றத்தில் முதல்வர் இருக்கையை விட்டுக் கொடுக்காததைப் பார்க்க முடிகிறது. துணை முதல்வர் என்ற அடைமொழியுடன் ஓ.பன்னீர் அழைக்கப்படுவதே பெரிய விஷயம் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் உள்ளக் கிடக்கை.
துணை முதல்வர் என்பது முதல்வரின் பொறுப்புகளில், முதல்வரின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொள்பவர் என்பதாக இல்லை. துணை முதல்வர் என்பது ஒரு கௌரவப் பதவியாகவே இப்போது ஓ.பன்னீருக்கு இருக்கிறது என்பதே உண்மை. அதை ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்துபார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.
பொதுவாகவே ஓர் ஆட்சியின் நிர்வாகக் கட்டமைப்பு, அதிகார உள் கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதை ஐஏஎஸ் அதிகாரிகள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஆட்சி என்ற வார்த்தையின் உள்ளே ஒளிந்திருக்கும் நெளிவுசுளிவுகள் எல்லாம் இந்த அதிகார வர்க்கத்துக்குத்தான் தெரியும்.
‘உண்மையிலேயே ஓ.பன்னீர் துணை முதல்வர் என்ற அந்தஸ்தில்தான் இருக்கிறாரா?’ என்று கோட்டை வட்டாரத்தில் கேட்டால் சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார்கள்.
“முதல்வர் சென்னையில் இருந்தால் காலை பத்து முதல் பதினோரு மணி வாக்கில் கோட்டைக்கு வந்துவிடுவார். தனது அலுவலகத்தில் அமர்ந்து கோப்புகளைப் பார்த்துவிட்டு, கொஞ்ச நேரத்தில் கிளம்புவார். அதேநேரம் துணை முதல்வரும் தலைமைச் செயலகத்துக்கு வருவார். அவரும் கோப்புகளைப் பார்வையிடுவார். இருவரும் சிரித்துப் பேசுவார்கள், முதல்வரின் அலுவலகத்தில் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால்… துணை முதல்வர் வகிக்கும் வீட்டுவசதித் துறை, நிதித் துறை ஆகிய துறைகளின் கோப்புகளை இறுதி செய்வது முதல்வர் அலுவலகம்தான். முதல்வருக்குக் கீழே சுமார் பத்துக்கும் குறையாத அண்டர் செகரட்டரிஸ் என்ற செயலாளர்கள் இருப்பார்கள். இதில் ஒவ்வொரு செயலாளருக்கும் சுமார் நான்கைந்து துறைகளின் கோப்புகள் செல்லும். அவர்கள் அதைச் சரிபார்த்து, திருத்தங்கள் செய்து முதல்வருக்கு அனுப்புவார்கள். கடைசியில் முதல்வர் பார்த்துத் தேவைப்பட்டால் அதில் திருத்தங்களைத் தனது செயலாளர் மூலம் செய்வார். இதுதான் வழக்கம். ஜெயலலிதா இருக்கும்போது இப்படித்தான் நடக்கும். அந்த வகையில்தான் இப்போதும் நடக்கிறது.
மேலும் ஒவ்வொரு துறை செயலாளரும், முதல்வரின் செயலாளர்களுடன் தொடர்பில் இருப்பார்கள். முக்கியமான கோப்புகளில் விளக்கம் தேவைப்பட்டால் அதைத் துறைச் செயலாளர்களிடம் கேட்டு முதல்வருக்குச் சமர்ப்பிக்க வேண்டியது அவர்களின் கடமை. துணை முதல்வர் விஷயத்திலும் இதுதான் நடக்கிறது. அமைச்சர்களின் துறைச் செயலாளர்களைப் போலவே துணை முதல்வரின் துறைச் செயலாளர்களும் முதல்வர் அலுவலகத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகத்தான் இருக்கிறார்கள்” என்றவர்கள் கொஞ்சம் விளக்கினார்கள்.
“இப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர் நிதித் துறை, வீட்டுவசதித் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராகவும் இருக்கிறார். நிதித் துறையின் செயலாளராக இருப்பவர் சண்முகம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனபிறகு சண்முகத்தை நிதித் துறை செயலாளர் பொறுப்பில் இருந்து மாற்றலாம் என்று அவருக்கு அப்போதைய ஆட்சியின் கட்டுப்பாட்டு அறையான கார்டனில் இருந்து ஓர் ஆலோசனை தரப்பட்டது. ஆனால், நிதித் துறை செயலாளர் பொறுப்பில் அவரே இருக்கட்டும் என்றே முடிவெடுத்தார் எடப்பாடி பழனிசாமி. இப்போது வரை சண்முகம்தான் அந்தப் பொறுப்பில் இருக்கிறார். சண்முகம் சேலத்துக்காரர். எடப்பாடியோடு பல ஆண்டுகளாக அறிமுகம் உள்ளவர். இப்போதும் பன்னீர் வகிக்கும் நிதித் துறைக்கு அவர்தான் செயலாளர். இதுவும் கோட்டை வட்டாரத்தில் முக்கியமாகப் பேசப்படுகிறது.
மேலும், துணை முதல்வரிடம் இருக்கும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், வீட்டுவசதித் துறை, நிதித் துறை ஆகிய மூன்று முக்கிய துறைகளின் அதிகாரிகளும் கோப்புகளை முதல்வர் அலுவலகத்துக்கு(ம்) அனுப்பிக் கொண்டிருப்பதுதான் நடைமுறையாக இருக்கிறது. இதன்மூலம் தெளிவாகும் நீதி என்னவென்றால்… ஓ.பன்னீர் அதிகாரபூர்வமாகத் துணை முதல்வர் என்று அழைக்கப்பட்டாலும், ‘அதிகாரிகளின் பூர்வமாக’ அவர் இப்போது அமைச்சர் மட்டுமே. மற்ற அமைச்சகங்களில் என்ன நடக்கிறதோ அதுவே ஓ.பன்னீரின் அமைச்சகத்திலும் நடக்கிறது. அமைச்சரவைக் கூட்டங்களில்கூட துணை முதல்வர் என்ற ஓர் இருக்கை முக்கியத்துவப்படுத்திக் காட்டப்படுவது கிடையாது” என்கிறார்கள்.
ஆக, நிர்வாகக் கட்டமைப்பில் துணை முதல்வர் என்ற வார்த்தைக்கான வீரியம் இப்போது துறை அமைச்சர் என்ற அளவிலேயே உள்ளது என்பதே கோட்டை வட்டாரம் நமக்குத் தரும் குறிப்பு.
இந்தக் குறிப்பை வெளிப்படையாக உறுதி செய்கிறது தமிழக அரசின் செய்தித் துறை. தமிழக அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் செய்தி, மக்கள் தொடர்புத் துறையின் மூலமாகத்தான் செய்திக் குறிப்புகளாகவும் அறிக்கைகளாகவும் வெளியிடப்படும்.
அந்த வகையில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழக வீட்டுவசதி வாரியத்தில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்குப் பணி ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பைப் பார்த்தாலே… ஓ.பன்னீர் என்பவர் துணை முதல்வரா அல்லது துறை அமைச்சரா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.
அந்தச் செய்திக் குறிப்பு இதோ…
“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 5.4.2018 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 25 உதவி பொறியாளர், 19 நில அளவையர், 19 இளநிலை வரைவு அலுவலர், 12 தட்டச்சர், 125 இளநிலை உதவியாளர், 75 தொழில்நுட்ப உதவியாளர் என மொத்தம் 275 பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக ஏழு பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இஆப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் திரு.பி.கே.வைரமுத்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.ஷம்பு கல்லோலிகர், இஆப, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் செயலாளர் திரு.பி.கணேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” என்கிறது அந்த செய்திக் குறிப்பு.
இந்தச் செய்தியில் துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் என்ற பதம் துறை அமைச்சர் என்ற இடத்தில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பணி ஆணைகளை அதுவும் துணை முதல்வரின் துறைக்கு உட்பட்ட பணி ஆணைகளை அவரால் ஏன் வழங்க முடியவில்லை? மேலும், இந்தச் செய்திக்காக தமிழக அரசு வெளியிட்டுள்ள புகைப்படம் பற்றிய குறிப்பில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரே குறிப்பிடப்படவில்லை. அந்தப் புகைப்படத்தை அரசு வெளியிட்டுள்ள குறிப்போடு கீழே தந்திருக்கிறோம்.
இதுதான் இன்றைய கோட்டையின் நிலவரம்.
அதேநேரம், கடந்த மார்ச் 5, 6, 7 தேதிகளில் நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் துணை முதல்வர் என்ற பதவிக்குரிய கௌரவம் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தரப்பட்டது என்பதையும் இங்கே நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், அந்த முக்கியத்துவம் அமைச்சரவைக் கூட்டங்களிலோ, முக்கிய ஆலோசனைக் கூட்டங்களிலோ ஓ.பன்னீருக்கு இல்லை என்பதும் உண்மையே!
கட்சி என்ற அளவில் ஓ.பன்னீர்தான் ஒருங்கிணைப்பாளர். அங்கே எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.
ஆனால், நிர்வாகக் கட்டமைப்பில் ஓ.பன்னீர் செல்வம் இணை முதல்வர் என்ற பதவியில் இல்லை. மாறாகத் துணை முதல்வர் என்ற பொறுப்பில்தான் இருக்கிறார். அதுவும் வெளியே துணை முதல்வர், உள்ளே துறை அமைச்சர் என்ற அளவிலேயே அவருடைய எல்லை இருக்கிறது.
இதற்கான பின்னணி அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் இருந்தே தொடங்குகிறது….
(லீக் ஆகும்)