எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 3
ஆரா
முதல்வர் இருக்கையை நிலை நிறுத்திக் கொள்வதிலும், அதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதிலும் கொலம்பஸுக்கு இணையாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
சட்டமன்றத்தில் முதல்வருக்குரிய இருக்கையைக் கூட துணை முதல்வருக்கு பங்கிட்டுத் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டவர் முதல்வருக்குரிய அதிகாரங்களை எப்படி பங்கிட்டுக் கொள்வார்?
அமைச்சரவையில் தானே நம்பர் ஒன், தனக்கு அடுத்த நிலையில்தான் ஓ.பன்னீர் இருக்க முடியுமே தவிர, தனக்கு இணையானவர் என்று அமைச்சரவையில் யாரும் கிடையாது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார் முதல்வர். அதன் வெளிப்பாடுதான் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது எப்படியோ அதே வகையிலான இருக்கை நடைமுறைகள் இன்றும் பின்பற்றப்படுகின்றன.
இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் கேட்டால் இன்னும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள். ‘’இந்த உத்தியை எடப்பாடி பழனிசாமிதான் பின்பற்றுகிறார் என்றில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ,பன்னீர் முதல்வராக இருந்தார் அல்லவா? அப்போது அவரும் இதே உத்தியைதான் பின்பற்றினார். எனவே எடப்பாடியின் அணுகுமுறை என்பது புதிதல்ல’ என்கிறார்கள்.
ஆனால் பன்னீர் முதல்வராக இருந்தபோது துணை முதல்வர் என்று யாருமில்லை. ஆனால் இப்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமி என்றும், துணை முதல்வராக ஓ.பன்னீர் என்றும் ஆனபிறகுதான் சட்டமன்றத்தில் இருக்கைப் பங்கீடு பற்றிய வினாவே எழுகிறது. ஆனாலும் அதைத் தெளிவாக முறியடித்துவிட்டார் எடப்பாடி.
ஜெயலலிதாவைப் போன்றே சில விஷயங்களில் எடப்பாடி பழனிசாமி இருப்பது இந்த விஷயத்தில் மட்டுமில்லை.
ஒவ்வொரும் முதல்வருக்கும் பிஎஸ்ஓ எனப்படும் பர்சனல் செக்யூரிட்டி ஆபீசர்ஸ் என்றொரு குழு இருக்கும். இதில் காவலர்கள் முதல் போலீஸ் உயரதிகாரிகள் வரையிலான போலீஸார் இருப்பார்கள். ஒவ்வொரு நாளும் இவர்கள் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றுவார்கள். அந்த வகையில் சுமார் இருநூறுக்கு பேருக்கும் மேற்பட்டோர்தான் இந்த பணியில் இருப்பார்கள். முதல்வரின் வீட்டில் பணீயாற்றுவது, முதல்வரின் கான்வாய் செல்லும்போது செல்வது, தலைமைச் செயலகத்தில் இருப்பது என்பதே முதல்வரின் தனிப் பாதுகாப்பு குழுவின் வேலை.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இந்த பாதுகாப்புக் குழுவில் சுமார் முன்னூறு பேர் வேலை பார்த்தனர். ஜெயலலிதா அப்பலோவில் அட்மிட் ஆவதற்கு கொஞ்ச நாள் முன்பாக, அவரது பி எஸ் ஓ குழுவில் இருக்கும் போலீஸாருக்கு பதவி உயர்வு கொடுத்து தமிழகம் முழுதும் அனுப்பபப்ட்டனர்.
கான்ஸ்டபிள் என்ற நிலையில் இருந்து சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் என்று போய் டிஐஜி என்ற அந்தஸ்து வரையிலான அதிகாரிகள் இந்த குழுவில் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு கொடுத்து தமிழகம் முழுவதும் வேறு வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பின் ஜெயலலிதாவுக்கு புதிய பி எஸ் ஓ க்கள் தெரிவு செய்யப்பட்டனர். தமிழக காவல்துறையில் இருந்தே இவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
பொதுவாகவே இவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுவது வழக்கம். ஏனெனில் தமிழகத்தில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு முறையும் முதல்வரின் தனி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள்.
இப்போது என்னவென்றால்… ஜெயலலிதான் பிஎஸ் ஓ க்கள் தமிழக முழுக்க இருப்பது அதாவது வெளியே இருப்பது நல்லதல்ல என்று ஒரு தகவல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது
‘’ஜெயலலிதாவின் பிஎஸ் ஓ க்களாக இருந்தவர்கள் இப்போது தமிழகம் முழுக்க இருக்கிறார்கள். கட்சி உடைந்து தினகரன், சசிகலா வசம் சில பேர் இருக்கிறார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட காவல் அதிகாரிகளாக இருந்தவர்கள் காவல் நிலையங்களில் வேறு பணியில் இருந்தால், அவர்க்ளை தினகரன் டீம் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்’’ என்று தகவல் முதல்வருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ஓர் அதிரடி நடவடிக்கை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி.
என்ன தெரியுமா?
ஜெயலலிதா இருக்கும்போது அவருக்கு தனி பாதுபாப்பு அதிகாரிகளாக இருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழகம் முழுக்க இருக்கும் காவல் நிலையப் பணிகளில் இருந்து திரும்ப அழைக்கப்பட்டு இப்போதும் மீண்டும் முதல்வரின் சி எஸ் ஓ வில் இடம்பெற்றிருக்கிறார்கள். என்ன, அன்று போயஸ்கார்டனில் இருந்தவர்கள் இன்று கிரீன்வேஸ் சாலை முதல்வரின் இல்லத்தில் இருக்கிறார்கள்.
முதல்வரின் பாதுகாப்புப் பணி, கான்வாய் பணி, தலைமைச் செயலகத்தில் பணி என்று ஜெயலலிதாவை சுற்றி இருந்தவர்களே இப்போது, எடப்பாடி பழனிசாமியைச் சுற்றி இருக்கிறார்கள்.
இந்த நகர்வுக்குப் பின் எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம் இருக்கிறது என்கிறார்கள். ஒன்று… ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்தவர்கள் வெளியே இருப்பதன் மூலம் சில தகவல்கள் தினகரன், திமுக தரப்புக்கு போகக் கூடும் என்று அவர் நினைத்திருக்கலாம். இன்னொன்று, தனக்கு முன்னால் முதல்வராக இருந்த பன்னீரிடம் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகளை தவிர்க்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.
இப்படி ஒவ்வொரு நகர்விலும் திடமிட்டு செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்தபோது அந்த பதவிக்கு என்ன முக்கியத்துவம் தரப்பட்டதோ, அதே முக்கியத்துவம் தனக்கும் தரப்படவேண்டும் என்று செயல்படுகிறார் எடப்பாடி.
இது நிர்வாகக் கட்டமைப்பில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விஷயத்திலும் இதே அணுகுமுறைதான். அதுபற்றிப் பார்ப்போம்.
(லீக் ஆகும்)