எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 13

அரசியல் சிறப்புக் கட்டுரை

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 13

நெடுஞ்சாலை நிலவரம்!

ஆரா

எடப்பாடிக்கும் கட்கரிக்கும் என்ன கெமிஸ்ட்ரி?

மற்ற பலரையும்விடக் குறிப்பிட்ட இருவருக்கும் அலை நீளம் பொருந்திப் போவதை கெமிஸ்ட்ரி என்று அழைக்கிறோம். முதல்வராக இருந்தாலும் தமிழகத்தின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. இவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய இந்தத் துறை ரீதியான ஒற்றுமை மாநிலத்தின் மற்ற எல்லா அமைச்சர்களுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் இருக்கிறதா?

கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சென்னை வந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தமிழக முதல்வர் (நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்) எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேர்ந்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்கள். அதன்பின் இம்மூவரும் சேர்ந்து சுமார் இருபது நிமிடங்களுக்கும் மேலாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்துக்கு என்று 81 திட்டங்களையும் ஆயிரக்கணக்கான கோடிகளையும் வாரி இறைத்தார்.

அவற்றைப் பின்னால் பார்ப்போம்… இந்தக் காட்சியை அப்படியே நினைவு வைத்துக்கொண்டு அதற்கு இருபது நாள்கள் முன்னர் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் ஆற்றிய உரையைக் கொஞ்சம் செவி கொடுப்போம். அதாவது இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்ன நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றியும் தமிழகத்தின் தேவைகள், குறைகள் என்ன என்பது பற்றியும் அதில் குறிப்பிட்டிருக்கிறார் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்.

“14ஆவது நிதிக்குழு பரிந்துரையில் மத்திய அரசின் ஆதரவில் செயல்படும் திட்டங்களுக்கான நிதியை 75 சதவிகிதத்தில் இருந்து 60 சதவிகிதமாகக் குறைத்துவிட்டனர். கல்விக்கான நிதி ஒதுக்கீட்டையும் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு உயர்த்தவில்லை. சர்வ சிக் ஷான் அபியான், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான் ஆகிய கல்வித் திட்டங்கள் கடந்த மூன்றாண்டுகளாகத் தேக்கம் அடைந்து கிடக்கின்றன. இதுபோன்ற முக்கியமான கல்வித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், நீண்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சியை இழந்துவிடுவோம்.

அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர்கள் தங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை. மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் கடந்த ஒரு ஆண்டாகத் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரத்து 696 கோடி நிலுவையில் இருக்கிறது.

உதாரணமாக, போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித் தொகையில், எஸ்சி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ.1,547 கோடி நிலுகையில் இருக்கிறது. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சர்வசிக்ஷான் அபியான், ஆர்எம்எஸ்ஏ திட்டங்களுக்கு முறையே ரூ.1,312 கோடியும், ரூ.1,588 கோடியும் நிலுவையில் இருக்கிறது. ஏறக்குறைய ரூ.3 ஆயிரம் கோடி நிலுவகையில் தரப்படாமல் நிலுவையில் இருக்கிறது.

தமிழகத்தில் ஐந்து மீன்பிடித் துறைமுகம் ரூ.521 கோடியில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்குத் தொகை ரூ.298 கோடியாகும். அதில் இன்னும் ரூ.143 கோடி தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. ஆதலால் இதுபோன்ற திட்டங்களுக்கு உடனடியாக நிலுவைத் தொகை ஒதுக்க நிதி அமைச்சகம் முன்வர வேண்டும்” என்று கோரியிருக்கிறார் அதிமுகவின் எம்.பியான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்.

இன்னொரு பக்கம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி தமிழகத்துக்கு தர வேண்டிய நான்காயிரம் கோடி ரூபாயை முடக்கி வைத்திருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசு உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் நிதி அளித்து வருகிறது. 12 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி மற்றும் 12,528 கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,000 கோடி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு இவ்வருடம் மத்திய நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. ஆனால் முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத காரணத்தால் மத்திய அரசு இத்தொகையைத் தர மறுக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி டெல்லி சென்றார் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, 14ஆவது நிதிக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட நிதியைத் தமிழகத்துக்கு ஒதுக்கக் கோரி கோரிக்கை வைத்தார்.

“மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து தமிழகத்துக்கான 2017-18ஆம் ஆண்டுக்கான 14ஆவது மத்திய நிதிக்குழுவின் தவணைத் தொகையை விடுவிக்கக் கோரிக்கை வைத்தோம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.631.98 கோடியும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.758.06 கோடியும் செயலாக்க மானியமாக நகரப்புறப் பகுதிகளுக்கு ரூ.365.37 கோடியும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.194.78 கோடியும் விடுவிக்கும்படி கேட்டோம். அதேபோல், சென்னைப் பெருநகர மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும்; இதற்காகவும் நிதி கேட்டுள்ளோம். மேலும், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோரைச் சந்திக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

ஆக…. கல்விக்கு நிதி ஒதுக்கீடு இல்லை, மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை, உள்ளாட்சித் துறைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. பல்வேறு துறை அமைச்சர்கள் டெல்லி சென்று தத்தமது துறைக்கான மத்திய அமைச்சர்களைச் சந்தித்து நிதி கேட்டு போராட வேண்டியுள்ளது.

ஆனால், நெடுஞ்சாலைத் துறையில் மட்டும் ஏன் எல்லாமே தலைகீழாக நடக்கிறது?

மற்ற துறைகளுக்கெல்லாம் மாநில அமைச்சர் டெல்லி போகிறார். ஆனால், நெடுஞ்சாலைத் துறைக்கோ மத்திய அமைச்சர் சென்னை வருகிறார். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கான சாலைத் திட்டங்களை சென்னையில் வைத்து ஒப்புதல் தருகிறார். பதிலுக்குத் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றிகளை அள்ளிவிடுகிறார்.

மற்ற துறைகள் எல்லாம் முட்டுச் சந்துக்குள் மாட்டிக்கொண்டு திணறிக் கொண்டிருக்கையில் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் என்ன சிறப்பு? மற்ற துறைகளுக்கெல்லாம் கிள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு, நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் அள்ளிக் கொடுப்பதேன்? இது பாராட்டத் தக்க அம்சமா? ஆய்வு செய்யத்தக்க அம்சமா?

(லீக் ஆகும்)Edappadi Leaks Mini Series 13

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 1

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 2

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 3

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 4

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 5

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 6

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 7

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 8

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 9

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 10

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 11

எடப்பாடி லீக்ஸ்! மினி தொடர் – 12

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *